Tuesday, December 23, 2014

ஓவியத்தில் எரியும் சுடர்

என் தம்பி பையன். ஆஸ்திரேலியக் குடிமகனாக இருந்தாலும் முதல் முடி குன்றக்குடியில் தானே. அதற்காக வந்திருக்கிறான். தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் அலங்கார விளக்கை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அருகே கொண்டு சென்றதும் மெதுவாகக் கையை நீட்டித் தொட்டான். அப்போது எடுத்த படம் இது.


அவனது முகத்தைப் பார்த்த போது சுந்தரராமசாமியின் ”ஓவியத்தில் எரியும் சுடர்” கவிதை ஞாபகம் வந்தது.

ஓவியத்தில் எரியும் சுடர்

அந்த ஓவியத்தில் எரியும் சுடரை
கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை
அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன
தன் விரல்நுனிகளால்
எரியும் சுடரைத் தொடத்
துடிக்கிறது அதன் மனம்
சுடர் அருகே
தன் விரல்களைக் கொண்டுபோன பின்பும்
தயங்கி
மிகத் தயங்கி
தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது
அந்தக் குழந்தை
அந்தச் சுடர்
தன்னை எரித்துக்கொண்டே
ஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அந்தச் சுடர்
உருவாகி வந்தபோது
ஓவியாவின் விரல்களை எரிக்காமல் இருந்த விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அழிக்காமல் எரியவும்
அழகாக நிற்கவும்
எப்படிக் கற்றுக்கொண்டது அது ?
குழந்தையின் விரல்களில் அப்போதும்
வியப்பு துடித்துக்கொண்டிருக்கிறது.

No comments: