Wednesday, December 10, 2014

சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே

சம்மந்தமேயில்லாமல் எதையாவது படித்துக் கொண்டிருப்பது தான் என்னுடைய ஆகச் சிறந்த பொழுதுபோக்கு. அப்படித்தான் அன்று தேவாரத்தில் புற்றில் வாளரவும் அஞ்சேன் எனத்தொடங்கும் அச்சப்பத்து பாடல்கள் படிக்கத் தொடங்கினேன்.

ஒவ்வொரு வரியும் அஞ்சேன், அஞ்சேன் என்று முடிய இதை வேறு எங்கோ படித்திருக்கிறோம் என்று தோன்றியது. ஆகா, பாரதியின் அச்சமில்லை, அச்சமில்லை இங்கே இருந்து தான் உருவாயிற்றா?. பாரதி அறிஞர்கள் ஏற்கனவே பாரதி பாடல்களில் தேவாரத்தின் தாக்கம் பற்றி கட்டுரை எழுதியிருக்கலாம், எனக்குத் தெரியவில்லை.

குறிப்பாக, 3ஆம் பாடலில் வரும்
வளைக்கையார் கடைக்க ணஞ்சேன்

மற்றும் 4ஆம் பாடலில் வரும்
கிளியனார் கிளவி அஞ்சேன்
அவர்கிறி முறுவல் அஞ்சேன்

இவ்வரிகள் பாரதியின்
கச்சணிந்த கொங்கை மாதர்
   கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.
வரிகளை நினைவூட்டின.தமிழின் தொடர்ச்சி என்பது இது தானோ? எட்டாம் நூற்றாண்டுக் கவிஞன் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞனுக்கு அளிக்கும் கொடை.

அப்படியே ஒரு எண்ணம் தோன்றியது. தமிழ்க் கவிஞர்கள் எப்போதும் பெண்ணைப் பார்த்து பயந்தே வந்திருக்கிறார்கள். அதுவும் பெண்ணின் சிரிப்பு / கடைக்கண் பார்வை, ஆணை அப்படியே கவிழ்த்துவிடும் என்ற எண்ணம் வலுவாக வேரூன்றியிருக்கிறது.

மேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களின் தொடர்ச்சியை நாம் பழமொழிகளிலும் (பொம்பள சிரிச்சா போச்சு) திரைப் பாடல்களிலும் (கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி) காணலாம்.  இதன் உச்சக்கட்ட கவித்துவம் யாரோ பெயர் தெரியாத கவிஞனால் ஆட்டோ ரிக்‌ஷாக்களின் பின்னே எழுதப்பட்ட வரிகள் தான்.

சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே



3 comments:

Nandhu said...

takes some writing! well written and write more often. nandhu

Chenthil said...

Thanks Prem.

Nandhu, Thanks. Though I wish I could have elaborated a bit more

Anonymous said...

It is from thiruvasagam