டோபா டேக் சிங் - சதத் ஹசன் மண்டோ
(எனது தமிழ் மொழிபெயர்ப்பு)
பிரிவினைக்கு
இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து ஹிந்துஸ்தான் பாகிஸ்தான் நாட்டு அரசாங்கங்களுக்கு குற்றவாளிகளை
இடம் மாற்றிக் கொண்டது போலவே பைத்தியக்காரர்களையும் இடம் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று
ஒரு எண்ணம் வந்தது; அதாவது ஹிந்துஸ்தானப்
பைத்தியக்கார விடுதிகளில் உள்ள முஸ்லிம் பைத்தியக்காரர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்
படவேண்டும். பாகிஸ்தானில் உள்ள ஹிந்து மற்றும் சீக்கியப் பைத்தியக்காரர்களை
ஹிந்துஸ்தானின் பொறுப்பில் விடவேண்டும் என்று.
இந்த
எண்ணம் சரியானதா இல்லை பைத்தியக்காரத்தனமானதா என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இருந்தாலும் மெத்தப் படித்தவர்களின் முடிவின்
படி உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் இங்கும் அங்குமாக நடத்தப்பட்டன. இறுதியில் பைத்தியக்காரர்களை இடம் மாற்றிக் கொள்வதற்கு நாள் குறிக்கப் பட்டது.
துல்லியமான விசாரணைகள் செய்யப்பட்டன. ஹிந்துஸ்தானில் சொந்தக்காரர்கள் இருந்த முஸ்லிம் பைத்தியக்காரர்கள் அங்கேயே இருக்க அனுமதிக்கப்
பட்டனர். மற்றவர்கள் எல்லைக் கோட்டுக்கு அனுப்பப் பட்டனர்.
இங்கே பாகிஸ்தானில், அனைத்து ஹிந்துக்களும் சீக்கியர்களும்
ஏற்கனவே ஹிந்துஸ்தான் சென்று விட்டதால், யாரையும் இங்கே வைத்துக்
கொள்ளும் பிரச்சனை எழவில்லை. இங்கே இருந்த அனைத்து ஹிந்து மற்றும்
சீக்கியப் பைத்தியக்காரர்களும் போலிஸ் பாதுகாப்போடு எல்லைக் கோட்டுக்கு அழைத்துச் செல்லப்
பட்டனர்.
அந்தப்
பக்கம் என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் இங்கே லாஹூர் பைத்தியக்கார விடுதியில் இந்த இடமாற்றத்தைப் பற்றிச்
சேதி வந்தவுடன் தீவிர விவாதங்கள் ஆரம்பித்தன. பன்னிரெண்டு ஆண்டுகளாக
ஒரு நாள் விடாமல் ஜமீந்தார் நாளிதழைப் படித்து வந்த ஒரு முஸ்லிம் பைத்தியக்காரரிடம்
அவரது நண்பரான இன்னொரு பைத்தியக்காரர் “மெளல்வி சாப், இந்தப் பாகிஸ்தான் என்றால் என்ன?” என்று கேட்டார்.
தீவிர யோசனைக்குப் பின் “அது ஹிந்துஸ்தானில்
கூர்மையான சவரக் கத்திகள் செய்யும் ஒரு இடம்” என்று பதில் வந்தது.
இந்தப் பதில் அவர் நண்பருக்கு நிம்மதியைக் கொடுத்தது.
இதே
போல ஒரு சீக்கியப் பைத்தியக்காரரிடம் மற்றொரு சீக்கியப் பைத்தியக்காரர் “சர்தார்ஜி, நம்மை ஏன்
ஹிந்துஸ்தானிற்கு அனுப்புகிறார்கள்? நமக்கு
அங்கே பேசப்படும் மொழியே தெரியாதே?” என்று கேட்டார். அவர் சிரித்துக்கொண்டே பதிலளித்தார் “எனக்கு அந்த ஹிந்துஸ்தானிகளின்
மொழி தெரியும் – என்னவோ சைத்தான்கள் போல கூச்சல் போடுவார்கள்”
என்றார்.
ஒரு
நாள் குளிக்கும் போது ஒரு முஸ்லிம் பைத்தியக்காரர்
“பாகிஸ்தான் வாழ்க” என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.
கொடுத்த வேகத்தில் தரையில் வழுக்கி விழுந்து, தலையில்
அடிபட்டு மயக்கமானார்.
பைத்தியம்
பிடிக்காத பைத்தியக்காரர்களும் இந்த விடுதியில் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களில் நிறைய பேர் கொலைகாரர்கள்.
தூக்கிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களது உறவினர்கள் அதிகாரிகளுக்கு
லஞ்சம் கொடுத்து அவர்களைப் பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு ஹிந்துஸ்தான் ஏன் பாகப்பிரிவினை செய்யப்பட்டது, பாகிஸ்தான் என்றால் என்ன என்று ஒரளவுக்குத் தெரியும். ஆனாலும் சரியாகத் தெரியாது. செய்தித்தாள்கள் படித்தாலும்
ஒன்றும் புரியவில்லை. விடுதி காவலாளிகள் படிப்பறிவில்லாத மூடர்கள்.
அவர்களது பேச்சிலிருந்தும் ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று தான் : முகமது
அலி ஜின்னா என்று ஒரு மனிதர் இருக்கிறார்; அவர் மக்களால் காயித்
ஏ ஆசாம் என்று அழைக்கப் படுகிறார். அவர் முஸ்லிம்களுக்காகத் தனி
நாடு உருவாக்கியிருக்கிறார். அதன் பெயர் பாகிஸ்தான். ஆனால் அது எங்கு இருக்கிறது , எந்த இடத்தில் இருக்கிறது
– அதைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. இதனால்
அந்தப் பைத்தியக்கார விடுதியில் முற்றிலும் மனம் பிறழாத பைத்தியக்காரர்கள் தாங்கள்
இருப்பது ஹிந்துஸ்தானா, பாகிஸ்தானா என்ற குழப்பத்தில் இருந்தனர்.
அவர்கள் இருப்பது ஹிந்துஸ்தான் என்றால் பாகிஸ்தான் எங்கு உள்ளது?
அவர்கள் இருப்பது பாகிஸ்தான் என்றால், அது எப்படி
சாத்தியம்? இதே இடத்தில் சில நாட்களுக்கு முன் அவர்கள் ஹிந்துஸ்தானில்
தானே இருந்தார்கள்?
ஒரு
பைத்தியக்காரர் இந்த ஹிந்துஸ்தான் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஹிந்துஸ்தான் குழப்பத்தினால் மேலும் பைத்தியமாகி விட்டார்.
ஒரு நாள் விடுதியைப் பெருக்கிக் கொண்டிருந்த போது, அங்கு இருந்த மரத்தில் ஏறி அதன் கிளையில் அமர்ந்து கொண்டு இரண்டு மணி நேரம்
விடாமல் பாகிஸ்தான் ஹிந்துஸ்தான் பிரச்சனையைப் பற்றி நுணுக்கமான உரையாற்றினார்.
காவலாளிகள் அவரைக் கீழே வரச் சொன்ன போது, மேலும்
உயரே ஏறிக்கொண்டார். அவரை மிரட்டி இறங்கச் சொன்ன போது,
“எனக்கு ஹிந்துஸ்தானிலோ பாகிஸ்தானிலோ வாழ விருப்பம் இல்லை. நான் இந்த மரத்தின் மேலேயே வாழப் போகிறேன்” என்றார்.
மிகுந்த
சிரமத்திற்குப் பிறகு ஆவேசம் தணிந்து கீழே இறங்கி வந்த அவர், தனது
ஹிந்து மற்றும் சீக்கிய நண்பர்களைக் கட்டித் தழுவிக் கண்ணீர் வடித்தார். அவர்கள்
அவரை விட்டுவிட்டு ஹிந்துஸ்தான் போகப் போகிறார்கள் என்று எண்ணிய போது அவர் மனம் கனத்தது.
எம்.எஸ்சி.
படித்த ஒரு முஸ்லிம் பொறியாளர் ஒருவர் அனைத்துக்
கைதிகளிடமும் இருந்து விலகி எந்நேரமும் தோட்டத்தில் தனியானதொரு பாதையில் நடந்து
கொண்டிருப்பார்.
இந்தப் பிரிவினை செய்தி அறிந்தவுடன் தான் அணிந்திருந்த
அனைத்து ஆடைகளையும் கழற்றி விடுதிக் காப்பாளரிடம் கொடுத்துவிட்டு அவர் அம்மணமாக
நடக்கத் தொடங்கினார்.
சினியோட் ஊரைச் சேர்ந்த பருத்த முஸ்லிம் பைத்தியக்காரர்
ஒருவர் - தீவிர முஸ்லிம் லீக் தொண்டர் – தினமும் பதினைந்து
பதினாறு முறை குளித்துக் கொண்டிருந்தவர், திடீரென அந்தப்
பழக்கத்தைக் கை விட்டார்.
அவர் பெயர் முகமது அலி. ஆகவே, தான் காயித்
– ஏ
– ஆசாம் முகமது அலி ஜின்னா என்று பைத்தியக்காரத் தனமாகப்
பிரகடனம் செய்தார்.
அவரைப் பார்த்து ஒரு சீக்கியப் பைத்தியக்காரர் மாஸ்டர் தாரா
சிங் ஆனார்.
இந்தப் பைத்தியக்காரத் தனம் கிட்டத்தட்ட ரத்த களறி வரை
சென்று விட்டது.
அவர்கள் இருவரும் ’பயங்கரப்
பைத்தியக்காரர்கள்”
என்று அறிவிக்கப் பட்டுத் தனித்தனி அறைகளில் அடைக்கப்
பட்டனர்.
லாஹூரைச் சேர்ந்த இள வயது இந்து வக்கீல் ஒருவர் -
காதலியால் நிராகரிக்கப்பட்டு பைத்தியம் ஆனவர் - அமிர்தசரஸ் இந்தியாவோடு இணையப் போகிறது என்று அறிந்ததும் மிகவும்
வருத்தமுற்றார்.
அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இந்துப் பெண் மீது தான் அவர் காதல்
வயப்பட்டிருந்தார்.
அவள் அவரை நிராகரித்தாலும், தன்னுடைய
பைத்தியக்கார நிலையிலும் அவர் அவளை மறக்கவில்லை. அதனால்
ஹிந்துஸ்தானை இரண்டாகப் பிரிக்க ஒற்றுமையாய் வேலை
பார்த்த இந்து முஸ்லிம் தலைவர்களை அவர் ஏகவசனத்தில் வசை பாடினார் – அவரது காதலி ஹிந்துஸ்தானியாகி விட்டாள், அவர் பாகிஸ்தானியாகி
விட்டார்.
பைத்தியக்காரர்களை
இடம் மாற்றிக் கொள்வது பற்றிப் பேச்சு எழுந்தவுடன், சில பைத்தியக்காரர்கள் அந்த வக்கீலிடம், வருத்தப் பட வேண்டாம், ஹிந்துஸ்தானிற்கு
அவரை அனுப்பி விடுவார்கள் – அவரது காதலி வாழும் ஹிந்துஸ்தானிற்கு- என்று ஆறுதல் கூறினார்கள். ஆனால் அவர் லாஹூரை விட்டுச் செல்ல விரும்பவில்லை. அமிர்தசரஸில் அவரது வக்கீல் தொழில் பிரகாசிக்காது என்று
அவர் நினைத்தார்.
விடுதியின்
ஐரோப்பிய அறைகளில் இரண்டு ஆங்கிலோ இந்தியப் பைத்தியக்காரர்கள் இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் ஹிந்துஸ்தானிற்கு விடுதலை அளித்துவிட்டுப் போய் விட்டார்கள் என்று அறிந்ததும் அவர்கள்
அதிர்ந்து போனார்கள். தங்கள்
நிலை என்ன என்ற முக்கியமான கேள்வியை அவர்கள் தனியாகப் பல மணி நேரம் விவாதித்துக்
கொண்டிருந்தார்கள். ஐரோப்பிய
அறைகள் இருக்குமா, இல்லை
மூடப்பட்டு விடுமா? காலை
உணவு கிடைக்குமா கிடைக்காதா? நல்ல
ரொட்டிக்குப் பதில் இந்தியச் சப்பாத்தி தின்று விக்கி
விக்கிச் சாக வேண்டுமா?
அந்தப்
பைத்தியக்கார விடுதியில் ஒரு சீக்கியர் 15 வருடங்களாக இருந்தார். எப்போதும் புரியாத புதிரான வார்த்தைகளை அவர் வாய்
முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்: “மேலே வெல்லம் அனெக்ஸ் பார்த்தால் விளக்கின் பாசிப்
பருப்பு”; அவர்
இரவு பகலாகத் தூங்குவதே
இல்லை. அவர் பதினைந்து
வருடங்களாக ஒரு நொடி கூட தூங்கியதே இல்லை என்று காவலாளிகள் பேசிக் கொண்டார்கள். கீழே படுப்பது கூட இல்லை. சில நேரம் சுவரில் சாய்ந்து கொள்வது மட்டும் உண்டு.
எந்நேரமும்
நின்று கொண்டே இருந்ததால் அவரது கால்கள் வீங்கியிருந்தன. கணுக்கால்களும் வீங்கியிருந்தன. ஆனாலும் அவர் படுத்து ஓய்வெடுக்கவில்லை. பைத்தியக்கார விடுதியில் ஹிந்துஸ்தான் பாகிஸ்தான் மற்றும் பைத்தியக்காரர்கள் இடம் மாற்றம் பற்றி பேச்செழுந்தபோது அவர் அதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டார். யாராவது
அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டால், மிகத்
தீவிரத்துடன் “மேலே வெல்லம் அனெக்ஸ் பார்த்தால் பாகிஸ்தான் அரசின் பாசிப்
பருப்பு” என்று
பதிலளித்தார்.
சில
நாட்களில் ”பாகிஸ்தான்
அரசு” “டோபா
டேக் சிங் அரசு” என்று
மாறியது. மற்ற
பைத்தியக்கார்ர்களிடம் அவரது வீடு இருந்த டோபா டேக் சிங் கிராமம் எங்கே இருக்கிறது என்று கேட்கத் தொடங்கினார். ஆனால் அது ஹிந்துஸ்தானில்
இருக்கிறதா இல்லை பாகிஸ்தானில் இருக்கிறதா என்று யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு பதில் சொல்ல ஆரம்பித்து அவர்களே குழம்பிவிடுவார்கள். சியால்கோட் ஹிந்துஸ்தானில் இருந்த்து, ஆனால்
இப்போது பாகிஸ்தானில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்று பாகிஸ்தானில் இருக்கும் லாஹூர் நாளைக்கு ஹிந்துஸ்தான் சென்று விடக்கூடுமா என்று யாருக்குத் தெரியும்? இல்லை
மொத்த ஹிந்துஸ்தானும்
பாகிஸ்தான் ஆகி விடுமா? ஹிந்துஸ்தானும், பாகிஸ்தானும் என்றாவது ஒரு நாள் முற்றிலும் காணாமல் போய்விடாது என்று யாரால் நெஞ்சைத் தொட்டு உறுதியாகச் சொல்லமுடியும்?
இந்த
சீக்கியப் பைத்தியக்காரரின் தலைமுடி கொட்டிப்போய் மெலிந்த நூல் போல் இருந்தது. அவர்
எப்போதாவது தான் குளிப்பார் என்பதால் தலைமுடியும் தாடியும் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு பயங்கரமான தோற்றத்தைக் கொடுத்தது. ஆனால்
அவர் தொந்தரவு இல்லாதவர். பதினைந்து
வருடங்களில் அவர் யாருடனும் சண்டை போட்டதேயில்லை.
விடுதியின் நீண்டநாள் காவலாளிகளுக்கு அவரைப் பற்றித் தெரிந்தது இவ்வளவு தான்: அவருக்கு
டோபா டேக் சிங்கில் கொஞ்சம் நிலம் இருந்தது. செழிப்பான
நிலச்சுவாந்தாராய் இருக்கையில் திடீரென அவர் மனம் பிறழ்ந்தது. அவரது
உறவினர்கள் அவரைக் கனத்த சங்கிலியால் பிணைத்து பைத்தியக்கார விடுதிக்கு அழைத்து வந்து சேர்த்து விட்டுச் சென்று விட்டனர்
அவர்கள் மாதம் .ஒருமுறை வந்து
அவரிடம் நலம் விசாரித்துச் சென்றனர். நெடுங்காலமாக
இந்த வருகை தவறாமல்
நடந்துவந்தது. ஆனால் பாகிஸ்தான்
– ஹிந்துஸ்தான் குழப்பம் ஆரம்பித்த
பிறகு அவர்களது வருகை
நின்று விட்டது.
அவர் பெயர் பிஷன் சிங், ஆனால் எல்லாரும்
அவரை டோபா டேக் சிங் என்றே கூப்பிட்டார்கள். அவருக்கு நாள்,
கிழமை, வந்து எவ்வளவு வருடங்கள் ஆயிற்று என்பது
எதுவும் சுத்தமாகத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு மாதமும் அவரது உறவினர்கள்
வரப்போகும் நாள் மட்டும் அவருக்குத் தெரிந்துவிடும். அவர்கள்
வருகிறார்கள் என்று காவலாளிகளிடம் அவர் கூறுவார். அன்றைக்கு நன்றாக சோப்புத் தேய்த்துக் குளித்து,தலைக்கு
எண்ணெய் வைத்து வாரிக்கொள்வார். காவலாளிகளிடம் அவர் மற்ற நாட்களில் போடாத நல்ல ஆடைகளை எடுத்துவரச்
சொல்லி அணிந்துகொண்டு உறவினர்களைப் பார்க்கச் செல்வார். அவர்கள்
ஏதாவது கேட்டால் அமைதியாக இருப்பார் இல்லை அவ்வப்போது “மேலே வெல்லம் அனெக்ஸ் பார்த்தால் விளக்கின் பாசிப் பருப்பு” என்று
சொல்லுவார்.
அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள்
மாதம் ஒரு விரற்கடை அளவு வளர்ந்து பதினைந்து வருடங்களில் ஒரு
இளம் பெண்ணாகிவிட்டாள். பிஷன் சிங்கிற்கு அவளை அடையாளம் கூடத்
தெரியவில்லை. அவள் குழந்தையாய் இருந்த போது அப்பாவைப் பார்க்கும்
போது கண்ணீர் வடிப்பாள். வளர்ந்த பின்னும் அவள் கண்களில் இருந்து
கண்ணீர் வந்துகொண்டிருந்தது.
பாகிஸ்தான் ஹிந்துஸ்தான் கதை ஆரம்பித்ததில் இருந்து அவர் மற்ற
பைத்தியக்காரர்களிடம் டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது என்று கேட்கத் தொடங்கினார்.
திருப்தியான பதில் கிடைக்காததனால் நாளுக்கு நாள் அவரது பதட்டம் கூடியது.
இப்போது அவரைப் பார்க்க வருபவர்களும் வரவில்லை. முன்னெல்லாம் அவரது உள்ளுணர்வுக்குப் பார்வையாளர்கள்
வரப் போவது தெரியும். ஆனால் அவரது உள்மனதில்
இருந்து வந்த குரலும் இப்போது அமைதியாகி விட்டது போல.
அவர் மீதுள்ள இரக்கத்தால் பழங்கள்,
இனிப்புகள், துணிமணிகள் கொண்டு வருபவர்கள் இப்போது
வர வேண்டும் என்று அவர் மிகவும் விரும்பினார். அவர்களிடம் டோபா
டேக் சிங் எங்கே இருக்கிறது என்று கேட்டால், அவர்கள் கண்டிப்பாக
அது பாகிஸ்தானில் இருக்கிறது அல்லது ஹிந்துஸ்தானில் என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்கள் அவரது நிலம் இருந்த டோபா டேக் சிங்கில் இருந்து வருபவர்கள்
என்பது அவர் எண்ணம்.
அந்தப் பைத்தியக்கார விடுதியில் தன்னைக் கடவுள் என்று அழைத்துக்
கொண்ட ஒரு பைத்தியக்காரரும் இருந்தார். ஒரு நாள்
பிஷன் சிங் அவரிடம் டோபா டேக் சிங் பாகிஸ்தானில் இருக்கிறதா இல்லை ஹிந்துஸ்தானிலா என்று
கேட்ட போது அவர் அவரது வழக்கம் போல் சத்தமாகச் சிரித்துவிட்டு
“அது பாகிஸ்தானிலும் இல்லை, ஹிந்துஸ்தானிலும் இல்லை
– ஏனென்றால் நாங்கள் இன்னும் உத்தரவிடவில்லை” என்றார்.
பலமுறை பிஷன் சிங் இந்தக் கடவுளைக் கெஞ்சிக் கூத்தாடி உத்தரவிடும்
படி கேட்டுக்கொண்டார்,
அப்படியாவது குழப்பம் தீருமென. ஆனால் கடவுள் எப்போதும்
மும்முரமாகவே இருந்தார், அவருக்கு எண்ணற்ற உத்தரவுகள் கொடுக்க
வேண்டியிருந்த்து. ஒரு நாள், காத்திருந்து
காத்திருந்து கடுப்பான பிஷன் சிங் அவரிடம் கோபமாக “மேலே
வெல்லம் அனெக்ஸ் பார்த்தால் விளக்கின் பாசிப் பருப்பு வாழ்க குருஜி மற்றும் கல்சா,
குருஜிக்கே வெற்றி. இதைச் சொல்பவர் மகிழ்ந்திருப்பார்
–உண்மையே என்றும் நிரந்தரம்” என்று சத்தம்
போட்டார்.
ஒருவேளை அதன் அர்த்தம் இப்படி இருக்கலாம்
“ நீ முஸ்லிம்களின் கடவுள்! நீ சீக்கியர்களின்
கடவுளாய் இருந்திருந்தால் நான் சொல்வதைக் கேட்டிருப்பாய்”
இடமாற்றத்திற்கு சில நாட்களுக்கு முன் டோபா டேக் சிங்கில் இருந்து அவரது முஸ்லிம் நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க
வந்தார். அந்த நண்பர் இதற்கு முன் வந்ததில்லை. பிஷன் சிங் அவரைப் பார்த்து விட்டு ஒரு பக்கமாக நகர்ந்து திரும்பிப் போகப்
பார்த்தார். ஆனால் காவலாளிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
“உன்னைப் பார்க்கத் தான் இவர் வந்திருக்கிறார்.
இவர் உன் நண்பர் ஃபசல் தின்.”
பிஷன் சிங்
ஃபசல் தின்னை ஒரு முறை பார்த்துவிட்டு ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்தார். ஃபசல் தின் முன்னே வந்து அவர் தோள் மீது கை வைத்தார். “உன்னை வந்து பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாய் நினைத்திருந்தேன், நேரம் தான் கிடைக்கவில்லை.. உன் குடும்பத்தில் எல்லோரும் நலம். அவர்கள் அனைவரும் ஹிந்துஸ்தான்
போய்விட்டனர்..என்னால் முடிந்தவரை நான் உதவி செய்தேன் …உன் மகள் ரூப் கவுர்….”
அவர் சொல்ல
வந்த்தை பாதியிலேயே நிறுத்தினார். பிஷன் சிங்கிற்கு ஏதோ ஞாபகம் வந்தது “மகள் ரூப் கவுர்..”
ஃபசல் சிங்
தட்டுத்தடுமாறி “ஆமாம்..
அவள் … அவளும் நலம்… அவளும் அவர்களுடன் சென்றுவிட்டாள்” என்றார்.
பிஷன் சிங்
அமைதியாக இருந்தார். ஃபசல் தின் மீண்டும் பேச ஆரம்பித்தார் “உன்னை அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள்… இப்போது நீ ஹிந்துஸ்தான் போவதாய்க் கேள்விப்பட்டேன். பல்பேசர் சிங் அண்ணாவுக்கும் வாத்வா சிங் அண்ணாவுக்கும் என் வணக்கத்தை
சொல்லவும்.. தங்கை அம்ரித் கவுருக்கும்…பல்பேசர் அண்ணாவிடம் சொல், அவர் விட்டுச் சென்ற பழுப்பு நிற எருமைகளில்
ஒன்று ஆண் கன்று ஈன்றது..மற்றொன்று பெண் கன்று ஈன்றது ஆனால் அது
ஆறு நாட்களில் செத்துவிட்டது.அப்புறம் உனக்கு ஏதாவது வேண்டுமானால்
என்னிடம் சொல். உனக்கு உதவ காத்திருக்கிறேன். அப்புறம்.. உனக்குக் கொஞ்சம் பொரி உருண்டை கொண்டு
வந்திருக்கிறேன்.”
பிஷன் சிங் பொரி
உருண்டைப் பையை பக்கத்திலிருந்த காவலாளியிடம் கொடுத்து விட்டு ஃபசல் தின்னைப்
பார்த்துக் கேட்டார் “டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது?”
ஃபசல் தின்
ஆச்சரியத்துடன் “எங்கே இருக்கிறதா? எங்கே இருந்ததோ அங்கே தான் இருக்கிறது”
பிஷன் சிங்
கேட்டார் ”பாகிஸ்தானிலா இல்லை ஹிந்துஸ்தானிலா?”
“ஹிந்துஸ்தானில் – இல்லை, இல்லை,
பாகிஸ்தானில்” குழம்பிப் போனார் ஃபசல் தின்.
பிஷன் சிங் முணுமுணுத்துக் கொண்டே போனார் ”மேலே வெல்லம் அனெக்ஸ் பார்த்தால்
விளக்கின் பாசிப் பருப்பு பாகிஸ்தான் ஹிந்துஸ்தான் வெளியே போடா வெட்டிப்பேச்சு பேசுபவனே”
இடமாற்றத்துக்கான ஏற்பாடுகள்
முடிவடைந்து விட்டன. அங்கிருந்து இங்கு வரும் பைத்தியக்காரர்கள்
மற்றும் இங்கிருந்து அங்கே போகும் பைத்தியக்காரர்களின் பட்டியல் வந்து சேர்ந்த்து.
இடமாற்றத்துக்கான நாளும் குறிக்கப்பட்டது.
போலிஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஹிந்து
மற்றும் சீக்கிய பைத்தியக்காரர்கள் லாஹூர் பைத்தியக்கார விடுதியில் இருந்து கிளம்பிய
போது குளிர் மிகவும் அதிகமாயிருந்தது. துணைக்கு வார்டன்களும் அவர்களுடன் சென்றார்கள்.
வாகா எல்லையில் இரு குழுக்களின் மேலதிகாரிகளும் சந்தித்துக் கொண்டனர்; செயல் முறைகள்
இறுதி செய்யப்பட்ட பிறகு இடமாற்றம் ஆரம்பித்து இரவு முழுவதும் நடந்தது.
பைத்தியக்காரர்களை
லாரியில் இருந்து இறக்கி எதிர்பக்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பது மிகவும் கடினமான
காரியமாய் இருந்தது. சிலர் வெளியில் வரவே மறுத்தனர். வெளியே வந்தவர்களையும்
சமாளிக்க முடியவில்லை. அவர்கள் இங்கும் அங்கும் ஓடினர். அம்மணமாய்
இருந்தவர்களுக்கு ஆடை அணிவித்தால் அவர்கள் அதைக் கிழித்துத் தூக்கி எறிந்தனர். யாரோ
ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டினார், யாரோ ஒருவர் பாட்டுப் பாடினார். அவர்களுக்குள்ளே
சண்டை போட்டனர், அழுதனர், புலம்பினர். இந்த களேபரத்தில் ஒருவர் பேசுவது
மற்றவருக்குக் கேட்கவில்லை – பெண் பைத்தியங்களின் சத்தம் இதெற்கெல்லாம் மேலாக
இருந்தது. நடுக்கும் குளிரில் அனைவரின் பற்களும் தந்தியடித்துக் கொண்டிருந்தன.
பெரும்பான்மையான
பைத்தியக்காரர்களுக்கு இந்த இடமாற்றத்தில் இஷ்டமேயில்லை. ஏனென்றால் எதற்காக தங்களது
இடத்தில் இருந்து இப்படிப் பறித்துத் தூக்கி எறியப்படுகிறோம் என்று அவர்களுக்குப்
புரியவில்லை. ஓரளவு புரிந்தவர்களும் “பாகிஸ்தான் வாழ்க” “பாகிஸ்தான் ஒழிக” என்று
கோஷமெழுப்பிய படியே இருந்தனர். இந்த கோஷங்களைக் கேட்ட பல முஸ்லிம்களும்
சீக்கியர்களும் உணர்ச்சிவசப்பட்டனர். ஒரிரு முறை கிட்டத்தட்ட கைகலப்பு வரை சென்று தடுக்கப்பட்டனர்.
பிஷன் சிங்கின்
முறை வந்த போது வாகா எல்லைக்கு அந்தப்பக்கம் அவரை அழைத்து வந்த அதிகாரி பதிவேட்டில்
அவர் பெயரை எழுதத் தொடங்கினார். அப்போது பிஷன் சிங் “டோபா டேக் சிங் எங்கே
இருக்கிறது? பாகிஸ்தானிலா,ஹிந்துஸ்தானிலா?” என்று கேட்டார்.
துணைக்கு வந்த அதிகாரி
சிரித்தார் ““பாகிஸ்தானில்”
இதைக்
கேட்டவுடன் பிஷன் சிங் துள்ளிக் குதித்து, அதிகாரியின் கைக்கு அகப்படாமல் ஒரு
பக்கம் ஒதுங்கி, அந்தப்பக்கம் இருந்த அவரது சக பைத்தியக்காரர்களிடம் சேர ஓடினார்,
பாகிஸ்தான் காவலாளிகள் அவரைப் பிடித்து இந்தப் பக்கம் இழுத்தனர், ஆனால் அவர் நகர
மறுத்தார். “டோபா டேக் சிங் இங்கே இருக்கிறது” என்று கூறி உரக்கக் கூச்சலிடத்
தொடங்கினார் “மேலே வெல்லம் அனெக்ஸ் பார்த்தால் பாசிப்பருப்பு டோபா டேக் சிங்
பாகிஸ்தான்”
அவரை
ஒத்துக்கொள்ள வைக்க அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். “இங்கே பார், டோபா டேக்
சிங் ஹிந்துஸ்தான் போய்விட்டது! போகவில்லையென்றாலும் உடனடியாக அனுப்பி வைக்கப்
படும்”. ஆனால் அவர் அவர்களை நம்பவில்லை. வலுக்கட்டாயமாக இந்தப்பக்கம் இழுக்க
முயற்சி செய்த போது அவர் தனது வீங்கிய கால்களுடன் நடுவில் நின்று கொண்டார். எந்த
சக்தியாலும் அவரை அங்கிருந்து அகற்ற முடியாது என்று தோன்றியது.
அவர் தொந்தரவு இல்லாதவர்
என்பதால் அவர் மீது
பலப்பிரயோகம் செய்யப்படவில்லை. அவரை அங்கேயே நிற்க விட்டுவிட்டு மற்ற இடமாற்ற
வேலைகள் நடக்கத்தொடங்கின.
விடியலுக்கு
முன்னான அமைதியிலும் நிசப்தத்திலும் பிஷன் சிங்கின் அடித்தொண்டையில் இருந்து வானைப்
பிளக்கும் ஒரு ஓலம் எழுந்தது… இரு பக்கங்களில் இருந்தும் அதிகாரிகள் ஓடிவந்து
பார்த்தனர்..பதினைந்து வருடங்களாக,இரவு பகலாக நின்று கொண்டிருந்த மனிதர் கீழே
விழுந்து கிடந்தார். அங்கே முள்வேலிக்கு அந்தப்பக்கம் ஹிந்துஸ்தான் இருந்தது.
இங்கே அதே மாதிரி முள்வேலிக்குப் பின்னால் பாகிஸ்தான் இருந்தது. இரண்டுக்கும்
நடுவே, பெயரில்லாத அந்தத் துண்டு நிலத்தில், கீழே டோபா டேக் சிங்.
Translated from English translation of Frances W Pritchett
3 comments:
Dear Chenthil Nathan, I run the four-month-old magazine www.madrasmag.in
I would like to invite you to please share this story in the magazine's February 2015 edition. I usually also get a theatre artiste to read the story out for the benefit of some visually challenged readers of the magazine, I know.
You can reach me at madrasmag@hotmail.com Please do share some contact details.
Warm Regards,
Krupa
Sorry the email id is themadrasmag@hotmail.com
Manufactures of Automatic water level controller and Indicator in Chennai and Tamilnadu, wireless water tank level indicator and wireless water level controller in Chennai, OMR, Anna Nagar, Velachery.
Post a Comment