Thursday, April 25, 2019

கணுவில்லாக் கன்னல்

”அண்ணா, ’கணுவில்லா கண்கள்’ ந்னு ஒரு பாட்டுல வருது. என்ன அர்த்தம்” வாட்சப்பில் சித்தி பையன் கேட்டான். அவனுக்கு பாடலாசிரியர் தாமரை எழுதிய பாடல்கள் என்றால் உயிர். புரியாத சொற்களுக்கு என்னிடம் அவ்வப்போது பொருள் கேட்பான்.

’கணுவில்லாக் கண்கள்’. பொருளேயில்லையே என்று யோசித்தேன். கூகிளின் உதவியோடு தேடிப் பார்த்ததில் ‘நண்பேண்டா’ திரைப் படத்தில் வரும் ’நீராம்பல் பூவே’ பாடலில் வரும் வரி என்று தெரிந்தது. இணையப் பாடல் வரிகள் தளங்களில் ‘கணுவில்லாக் கண்ணால்’ என்று இருந்தது. ஒருவேளை ’கணுவில்லாக் கண்ணாளோ’? கண்ணில் ஏது கணு?

“கணு ன்னா joint / node. ’கணுவில்லாக் கண்ணால் / கண்ணாள்’ ன்னா பொருளே இல்லைடா. புரியலையே” என்று பதில் அனுப்பினேன்.

“அதான் உங்கள்ட்ட கேட்டேன்”

மானப் பிரச்சினை ஆகிவிட்டது. தாமரை தவறாக எழுதியிருக்க வாய்ப்பில்லை. யூட்யூப் சென்று பாடலைப் பார்த்தேன். நயன்தாராவைப் பார்த்து உதயநிதி பாடிக் கொண்டிருந்தார். பாடல் உச்சரிப்புத் தெளிவாகவே இருந்தது.

’கால் கொண்ட மின்னல்
கணுவில்லாக் கன்னல்..’

அடப்பாவிகளா. கன்னல் (கரும்பு) என்பதைத் தான் கண்கள் / கண்ணால் என்று மாற்றிவிட்டீர்களா.

தமிழ்ப்பாடல் வரிகள் தளங்களை நம்பவே நம்பாதீர்கள். ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்.  விபரீதப் பொருள் கொண்டு வந்து விடுவார்கள்.

2 comments:

dagalti said...

பாரதிதாசன் கூட எழுதியிருக்காரே:

கண்கள் பொருள் தரும் தமிழே
நீஓர் பூக்காடு
நான்ஓர் தம்பி

Sathya said...
This comment has been removed by a blog administrator.