புயலிலே ஒரு தோணி நாவலைப் பற்றி நான் அறிந்தது சாரு நிவேதிதாவின் கட்டுரை
ஒன்றிலிருந்து தான். அவர் அதைத் தமிழின் தலை சிறந்த நாவல் என்றுகு றிப்பிட்டிருந்தார். தொடர்ந்து நான் படித்த ஜெயமோகன் பட்டியலிலும் இந்த நாவல் இடம் பெற்றிருந்தது. அது வரை நான் ”புயலிலே ஒரு தோணி” பற்றியோ அதை எழுதிய ப.சிங்காரம் பற்றியோ கேள்விப் பட்டதில்லை. இரு வேறு துருவங்களாக இருக்கும் எழுத்தாளர்கள் ஒரு சேரப் பாராட்டும் அளவிற்கு இந்த
நாவலில் என்ன உள்ளது என்பதை அறியும் ஆவலில் தான் அந்த வருடப் புத்தகக்
கண்காட்சியில் புயலிலே ஒரு தோணி வாங்கினேன்.
முதல் பக்கத்திலேயே தெரிந்து விட்டது, இது 60களில் வந்த தமிழ் நாவல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்று. இரண்டாம் உலகப் போர் சமயத்தில்
இந்தேனேஷியாவின் மீடான் நகரில் இருக்கும் தமிழர்களில் இருந்து ஆரம்பிக்கிறது
கதை. கதை நாயகன் பாண்டியன் சாகசம் வேண்டி மீடானிலிருந்து பினாங்கு நகருக்குச்
செல்கிறான். அங்கு இருக்கும் தமிழர்களோடு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் நேதாஜியின் இந்தியத் தேசிய ராணுவத்தில் இணைகிறான். உளவாளியாக சாகசங்கள் புரிகிறான். நேதாஜி இறந்ததும் தன் அணியினரை மீண்டும் ரப்பர் தோட்டத் தொழிலாளிகளாக மாற்றி விட்டு மீடான் திரும்புகிறான். மீண்டும் ஒரு புரட்சிப் போராட்டத்தில் பங்கெடுக்கிறான். தன் வாழ்வின் அபத்தத்தை உணரும் நேரத்தில் என்னவாகிறான் என்பதே கதை.
பாண்டியன் நாவல் முழுவதும் ஒரு சாகசக் காரனாகவே முன்னிறுத்தப் படுகிறான். ஜப்பானியரோடு சரிக்கு சமமாகப் பேசுவதிலிருந்து, INA வில் வரும் வட இந்திய /
தென் இந்திய உட்பூசல் , கடைசியில் டச்சுப் படையினரோடு நடக்கும் சண்டை வரை ஜேம்ஸ் பாண்ட் போன்ற சாகசக் காரணாகவே சித்தரிக்கப் படுகிறான். ஆனால் அவன்
ஒற்றை நோக்கு கொண்ட சாகசப் பாத்திரம் அல்ல. ஒரு நிலையில்லாமல் அலையும், எந்நேரமும் சாவை நோக்கிப் பயணித்திருக்கும் பயணியாகவே தெரிகிறான். ஆங்கிலத்தில் சொல்வது போல “He seems to have a death wish".
சிங்காரத்தின் மொழி, வரலாற்றுப் பின்புலம் சார்ந்த விவரங்கள் மற்றும் வர்ணணைகள், உச்சகட்டப் பகடி, வாழ்வியல் தரிசனம் ஆகியவையே இந்த நாவலைத் தமிழின் மிகச் சிறந்த நாவல்கள் வரிசையில் நிறுத்துகின்றன. சிங்காரம் சிறு வயதிலேயே தமிழகத்தை விட்டுச் சென்று விட்ட படியால் அவரது மொழி சம கால கட்டத்தில் எழுதிய எந்த எழுத்தாளரையும் விட புதுமையாக இருக்கிறது. அவரே குறிப்பிடுவது போல், ஹெமிங்வேயின் பாதிப்பினால் எழுந்த மொழி நடை அவருடையது.
நாவலின் அடிநாதமாக வருவது வாழ்வின் அபத்தம். இந்திய விடுதலைக்காகப் போராடப் புறப்படும் இந்திய தேசிய இராணுவத்தில் (ஐ.என்.ஏ) தமிழர்களும் வட இந்தியர்களும் சண்டை போடுவது, ஜப்பானியருடன் சேர்ந்து போராடும் ஐ.என்.ஏ.வில் பாண்டியன் புரியும் அதி தீவிர சாகசம் ஜப்பானிய இராணுவ அதிகாரியைக் கொல்வது, சம்பந்தமே இல்லாத டச்சு – இந்தோனேஷியச் சண்டையில் பாண்டியன் ஈடுபடுவது என்று நீள்கிறது. புயலிலே அகப்பட்ட ஒரு தோணியாய் பாண்டியனின் வாழ்க்கை அங்குமிங்குமாய் அலைபாய்கிறது. புறநானூற்றுப் பாடலில் கணியன் பூங்குன்றனார் எழுதிய “பேர் யாற்று நீர் வழிப்படூஉம் புணை” தான் பாண்டியனின் வாழ்க்கை.
மீடானிலிருந்து பினாங்கிற்கு கப்பலில் போகும் போது வட்டிக் கடை ஆவன்னா தனது
முன்னால் முதலாளி வட்டிக்கடை செட்டியாரைப் பற்றிக் கூறுவதும், பாண்டியனின்
மதுரை நகர் தாசி வீடுகளைப் பற்றிய நினைவலைகளும், கிராமத்து வாழ்க்கை
நினைவுகளும் படிக்கப் படிக்கப் புது உலகை வாசகனுக்குக் காண்பிப்பவை. ஆவன்னா
விவரிக்கும் சீனாக்காரன் (வியாபாரம் ஆரம்பிக்க உதவிய செட்டியார் இறுதிச் சடங்கிற்காக இந்தியா வருபவன்), கிராமத்தில் சைவப் பிள்ளைமார் என்று கூறிக்கொண்டு இட்லிக்கடை வைத்திருக்கும் சகோதரிகள், வந்திருக்கும் வாடிக்கையாளர் நாடார் என்று தெரிந்ததும் பதறும் பரத்தை (”செட்டியாரெல்லாம் வர வீடு இது”) – இது போல ஒரு வரி வந்தாலும் மனதில் தங்கும் கதை மாந்தர்கள் நாவல் முழுவதும் பரவியுள்ளனர்.
நாவலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம் இதன் வரலாற்றுப் பதிவுகள். இரண்டாம் உலகப்போரின் போக்கை நாவலில் அங்கங்கே கோடிட்டுக் காட்டி ஒரு பருந்துப் பார்வையை வாசகனுக்கு அளிக்கிறார் சிங்காரம். பசிபிக் பெருங்கடல் யுத்தங்கள், ஹிட்லரின் ரஷியப் படையெடுப்பும் அதன் தோல்வியும் என்று இரண்டாம் உலகப்போரின் முக்கியமான நிகழ்வுகள் நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உள் நோக்கி எழுதப்பட்ட அந்தக் காலத் தமிழ் நாவல்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது.
சிங்காரத்தின் பகடிக்கு யாரும் தப்புவதில்லை. தமிழர்களின் பழம்பெருமைச் சவடால்களை பாண்டியன் கிண்டலடிக்கும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பேரவைக் கூட்டம் ஒரு எடுத்துக்காட்டு. தமிழ்ப்பேரவை கூட்டம் நடக்கும் அறைக் கதவைச் சற்றே மூடி வைக்குமாறு விடுதிப் பணியாளன் கேட்கிறான்.
ஹோட்டல்காரன் குனிந்து கிசுகிசுவென்று ஏதோ சொல்லவே, மாணிக்கத்தின் தலை அசைந்து அனுமதி கொடுத்தது. கதவைச் சாத்திவிட்டு நகர்ந்தான் பாஞ்சாங்.
”மெய்யன்பர்களே, கேளுங்கள்” மாணிக்கம் காலை நீட்டிச் சாய்ந்தான். “ ’மலேயா திருவள்ளுவர்’ சுப்பிரமணியனாரும், டத்தோ கிராமட் சாலையில் வீடு கொண்டு ஆன்றோர் விதித்த கற்பு நெறி தவறாதொழுகி ‘கலியுகக் கண்ணகி’ என்ற பட்டத்துடன் வாழ்ந்து வரும் வள்ளியம்மையாரும் இப்பொழுது ரதிகேளி விலாசம் என்ற சிறப்புப் பெயருடைய ஒன்பதாம் இலக்க அறைக்குள் சென்று கொண்டிருக்கின்றனர்.”
“கோவலனார் எங்கே?” கைலிக் கடைக்காரர் முன்னே குனிந்தார்.
“வாணிப அலுவலாய் அயலூர் – அதாவது திருக்கடையூர் மாதவி வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.”
இதன் தொடர்ச்சியாக நடைபெறும் விவாதத்தில் வரும் உரையாடல்.
மாணிக்கம்: தமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதல் வேலையாகப் ‘பொதிய மலை போதை’யில் இருந்து விடுபட வேண்டும். அது வரையில் முறையான மேம்பாடு முயற்சிகளுக்கு வழி பிறக்காது. “திருக்குறளைப் பார்! சிலப்பதிகாரத்தைப் பார்! தஞ்சைப் பெரிய கோயிலைப் பார்! காவேரிக் கல்லணையைப் பார்! என்ற கூக்குரல் இன்று பொருளற்ற முறையில் எழுப்பப் படுகிறது.
அடிகளார்: எது பொருளற்ற கூக்குரல்? அதற்கு முன் எந்த இனம் அத்தகைய எழுத்து மேன்மையையும் செயல்திறனையும் காட்டியிருக்கிறது? சொல் சொல் சொல்!
பாண்டியன்: உலக வரலாற்றுப் பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதற்கு அடிகளாரே சரியான உதாரணம். பெரிய கோயிலுக்கும் கல்லணைக்கும் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஃபேரோ மன்னர்கள் பிரமித் கோபுரங்களைக் கட்டிவிட்டனர். பாபிலோனியர், எப்போதும் நீர் நிறைந்த அகன்ற யூபிரத்தீஸ் நதிக்கு அடியில் பதினைந்து அடி அகலமும் பன்னிரெண்டு அடி உயரமும் கொண்ட சுரங்கப் பாதை ஒன்றை அமைத்திருந்தார்கள்..
மிக நுட்பமாக வரிக்கு வரி படிக்க வேண்டிய நாவல் இது. உதாரணமாக ஆவன்னா,
செட்டியார்கள் பற்றிக் கதை சொல்லி முடிக்கும் போது தன் இளைய மகள் வளையல் கேட்டு தான் வாங்கித் தராததை நினைத்து, ”இனி அவளை எப்ப பார்ப்பேனோ” என்று அழ ஆரம்பிப்பார். கூட இருப்பவர்கள் ஆறுதல் சொல்லுவார்கள். போரின் முடிவில் பாண்டியன் திரும்பி வரும் போது ஆவன்னாவைப் பற்றி விசாரிக்கும் போது அவரது இளைய மகள் மரணத்திலிருந்துஅவர் மன நிலை பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வரும். ஒரே வரி தான், ஆனால் அதற்குள் புலம் பெயர் வாழ்க்கையின் அவலம் பொதிந்திருக்கும்.
தமிழினி பதிப்பகத்தினரால் “புயலிலே ஒரு தோணி” யும் அதன் கிளைக் கதையான ”கடலுக்கு அப்பால்” லும் ஒரே புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது. இணையத்திலும் எளிதாகக் கிடைக்கிறது.
மலாய் வார்த்தைகள், நனவோடை(stream of consciousness) உத்திகள், பழந்தமிழ் இலக்கியப் பகடி புரியாதது போன்ற காரணங்களால் படிக்கக் கடினமான நாவல் என்று கருதப்படுகிறது . சற்றே முயற்சி எடுத்துப் படித்தால் புரியக் கூடிய நாவல் தான். தமிழின் மிக முக்கியமான நாவல் படிக்கச் சற்றே முயன்று தான் பார்க்கலாமே.

No comments:
Post a Comment