Saturday, September 10, 2016

அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா


அம்மா பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் புதுக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தில் தான். 19 வயதில் திருமணம் முடிந்து தூத்துக்குடி உரத் தொழிற்சாலை பணியாளர் குடியிருப்புக்கு வந்தது தான் அவளது முதல் வெளியுலகத் தொடர்பு. அந்தக் குடியிருப்பில் அப்பாவின் நண்பரின் மனைவி தான் ‘வைஷ்ணவி அம்மா’.

அந்தக் குடியிருப்புக்கு அம்மா சென்று இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணமாகி வந்தவர்  வைஷ்ணவி அம்மா. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். அம்மாவை விட இரண்டு மூன்று வயது இளையவராய் இருந்திருக்க வேண்டும். அவர்களுக்குப் பிறந்த பெண்ணு(வைஷ்ணவி)க்கும் பையனுக்கும் சரியாக என் தங்கை வயதும் தம்பி வயதும் இருக்கும்.

அம்மாவுக்கு நெருங்கிய தோழி என்றால் அது ’வைஷ்ணவி அம்மா’ தான். தினசரி வாழ்க்கைகயைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது என்ற எண்ணத்தில் அவர்கள் இணைந்தார்கள்.  ஆனந்த விகடன் தொடர்கதைகள், மகேந்திரன் திரைப் படங்கள் என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

1981ல் ’நண்டு’ படம் வெளிவந்த போது ’அள்ளித் தந்த வானம் அன்னை அல்லவா’ பாடல் அவர்களை ஆட்கொண்டது. படத்தைப் பற்றியும் பாடலைப் பற்றியும் பேசிப் பேசி மாய்ந்தார்கள். அம்மா சொல்லுவாள் “எல்லாரும் படம் போரடிக்குது, நல்லா இல்லைன்னு சொன்னாங்க. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. இந்தப் பாட்டைப் பத்தி மட்டும் அவ அரை மணி நேரம் பேசினா. நான் கேட்டுகிட்டிருந்தேன்”.





1982ல் என் தந்தை லிபியாவுக்கு வேலைக்குச் சென்றதால் நாங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி புதுக்கோட்டைக்கு இடம் பெயர்ந்தோம்.  வைஷ்ணவி அப்பா அபுதாபிக்கு வேலைக்குச் சென்றதால் அவர்களும் சென்னைக்கு இடம் மாறினார்கள். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகப் பார்த்துக் கொள்வோம் என்று பேசித் தோழிகள் இருவரும் பிரிந்தார்கள். 1985ல் வேலூரில் நடந்த சாலை விபத்து ஒன்றில் வைஷ்ணவி அம்மா இரண்டு குழந்தைகளுடன் மரணமடைந்தார்.

”அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா” பாடல் அம்மாவின் நினைவில் என்றென்றும் வைஷ்ணவி அம்மாவுடன் சேர்ந்து விட்டது. இந்தப் பாடலை எங்கே கேட்டாலும் அம்மா ஒரு கணம் அப்படியே நின்றுவிடுவாள். கண்ணில் சற்றே நீர் கோர்க்கும்.



5 comments:

Anonymous said...

You have a way of writing poignant events in a simple language without too much drama, but still end up being quiet affecting.

- Ananth

Chenthil said...

Thanks. I try really hard to tone down my writing.

Karthek said...

This brought back a flood of memories. Couldn't stop tearing up in the end.

Chenthil said...

Yes Prabhu. Was very difficult for me to write.

Gurusamy Thangavel said...

செந்தில், கடைசிப் பகுதியைப் படித்ததும் சட்டென்று என் எண்ணங்களே மாறிவிட்டன. கனத்த மனத்துடன் ரொம்ப தத்துவார்த்தமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.