சதத் ஹசன் மண்டோ எழுதிய ’Bu' (Urdu) சிறுகதை , என் தமிழ் மொழிபெயர்ப்பில். ஆங்கிலத்தில் ஆதிஷ் தஸீர் மொழிபெயர்த்ததை வைத்துத் தமிழில் மொழிபெயர்த்தேன். பாலியல் இச்சை தொடர்பான கதை.
வாசம்
அதே மழை நாட்கள். ஜன்னலுக்கு
வெளியே அரச மரத்தின் இலைகள் எப்போதும் போல நனைந்திருந்தன. ஜன்னலில் இருந்து சற்றே தள்ளிப் போடப்பட்டிருந்த தேக்கு மரக் கட்டிலில் ரந்தீர் மேல் பிணைந்திருந்தாள் அந்த மராத்திப் பெண்.
ஜன்னலுக்கு
வெளியே, அரச
மர இலைகள்
நீள பாம்படங்கள் போல இருட்டில் பட படவென
அடித்துக் கொண்டிருந்தன. அந்த மராத்திப் பெண் ரந்தீரை இறுகக் கட்டிக் கொண்டாள். நாள்
முழுக்க செய்தித்தாளில் செய்திகளையும் விளம்பரங்களையும் படித்துவிட்டு சற்று காற்று வாங்குவதற்காக அவன் பால்கனிக்கு வந்த போது அந்தி சாயத் தொடங்கியிருந்தது. அப்போது தான் அவளைப் பார்த்தான். அருகிலிருந்த
கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவள். புளிய
மரத்தடியில் ஒதுங்கி நின்றிருந்தாள். தொண்டையைச் செருமி அவளது கவனத்தை ஈர்த்து அவளை மேலே வருமாறு சைகை செய்தான்.
பல நாட்களாக அவன் தனிமையில் தவித்துக் கொண்டிருந்தான். மிக எளிதாகக் கிடைத்துக் கொண்டிருந்த பம்பாயின் கிறித்தவப் பெண்கள் அனைவரும் யுத்தத்தின் காரணமாக பெண்கள் துணை பாதுகாப்பு பிரிவில் சேர்ந்துவிட்டனர். அவர்களில் சிலர் கோட்டைக்குப் பக்கத்தில் நடனப் பள்ளிகள் ஆரம்பித்திருந்தனர். வெள்ளைக்கார வீரர்களுக்கு மட்டுமே அனுமதி. அது
தான் ரந்தீரின் மன உளைச்சலுக்குக்
காரணம்: ஒரு
பக்கம், கிறித்தவப் பெண்கள்
கிடைப்பது கடினமாகி விட்டது. இன்னொரு
பக்கம் அந்த வெள்ளைக்கார வீரர்களை விட எவ்வளவு தான் படித்தவனாக, கனவானாக, ஆரோக்கியமாக, அழகாக இருந்தாலும் தோல் வெள்ளையாக இல்லாத காரணத்தால் அவனுக்கு அந்த நடனப் பள்ளிகளில் அனுமதி இல்லை.
யுத்தம்
தொடங்குவதற்கு முன் நாக்பாரா மற்றும் தாஜ் ஹோட்டல் பக்கத்தில் இருந்த பல கிறித்தவப் பெண்களுடன்
ரந்தீர் உடலுறவு வைத்திருந்தான். அந்த உறவுகளைப் பற்றி அவன் தெளிவாக இருந்தான். அந்தப்
பெண்கள் ஒரு பொழுதுபோக்காகத் தான் காதலித்தார்கள், கல்யாணம் என்று வரும் போது ஒரு உதவாக்கரையைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.
ஹேசலைப்
பழி வாங்குவதற்காகத் தான் அவன் அந்த மராத்திப் பெண்ணை சைகை செய்து மேலே அழைத்திருந்தான். ஹேசல் கீழ் வீட்டில் இருப்பவள். தினமும்
காலையில் யூனிஃபார்ம் அணிந்து, அவளது
குட்டைத் தலைமயிர் மேலே தொப்பியை ஒரு பக்கமாகச் சரித்து நடைபாதையில் அவள் நடக்கும் தோரணை சாலையில் உள்ள மற்றவர்கள் எல்லாம் அவள் காலடியில் விழ வேண்டும் என்பது போல இருக்கும். இந்தக் கிறித்தவப் பெண்கள் மீது தனக்கு ஏன் இவ்வளவு ஈர்ப்பு என்று ரந்தீர் யோசித்தான். காட்சிப்படுத்தத்
தோதான உடல் பாகங்களை அவர்கள் நன்றாகக் காட்சிப்படுத்தினார்கள், வாஸ்தவம் தான்; மாதவிடாய்
பிரச்சனைகளைத் தயக்கமில்லாமல் பேசினார்கள்; பழைய காதலர்களைப் பற்றிப் பேசினார்கள்; நடன இசை கேட்டவுடன் ஆட ஆரம்பித்தார்கள்… அதெல்லாம் சரி தான், ஆனால்
எல்லா இனப் பெண்களும் இதைச் செய்யக்கூடுமே.
தான்
மேலே அழைத்த மராத்திப் பெண்ணுடன் படுக்கப் போகிறோம் என்று ரந்தீர் நினைக்கவில்லை. ஆனால் சில நொடிகள் கழித்து அவளது நனைந்து போன ஆடைகளைப் பார்த்த பின், “இவளுக்குக்
காய்ச்சல் வந்துவிடக் கூடாதே” என்று
நினைத்தவாறு, “இந்த ஆடைகளைக் கழற்றி விடு, இல்லை
என்றால் உனக்குச் சளி பிடித்துக் கொள்ளும்” என்றான்.
அவனது
நோக்கத்தை அவள் புரிந்து கொண்டாள். அவள்
கண்கள் சிகப்பு ஏறிச் சுழன்றன. ஆனால்
ரந்தீர் ஒரு வெள்ளை வேட்டியை அவளிடம் கொடுத்தவுடன் சற்றே யோசித்து தன் சேலையயை அவிழ்த்தாள். ஈரத்தில் அதன் அழுக்கு இன்னும் அதிகமாய்த் தெரிந்தது. அதை
ஒரு பக்கம் வைத்துவிட்டு இடுப்பைச் சுற்றி வேட்டியைக் கட்டினாள். இறுக்கமான
ரவிக்கையைக் கழற்ற முயற்சி செய்தாள். ஆனால்
அதன் இரு முனைகளும் முடிச்சுப் போட்டு அவ்வளவாக ஆழமில்லாத அவளது மார்புக் குழியில் அழுந்தியிருந்தன.
தனது
உடைந்து போன நகங்களைக் கொண்டு அந்த ரவிக்கை முடிச்சை அவிழ்க்கப் போராடினாள். அதுவோ
மழையின் ஈரத்தில் இறுகியிருந்தது. கடைசியில் களைத்துப் போய் ரந்தீரிடம் மராத்தியில் ஏதோ சொன்னாள். “நான் என்ன செய்யட்டும்? இத அவுக்க
முடியல” என்பது
போல இருந்தது.
ரந்தீர்
அவள் பக்கத்தில் உட்கார்ந்து முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்தான். கூடிய
சீக்கிரம் அவனும் களைத்துப் போய் முடிச்சின் இரு முனைகளையும் இரு கைகளில் பிடித்து இழுத்தான். முடிச்சு
நழுவியது; ரந்தீரின்
கைகள் பறந்தன, துடிக்கும்
இரு முலைகள் அவன் கண்முன் வந்தன. ஒரு
தேர்ந்த குயவனைப் போல இரண்டு களிமண் குடங்களை இந்த மராத்திப் பெண்ணின் நெஞ்சில் தன் கைகள் தான் செய்தனவோ என்று ரந்தீருக்குத் தோன்றியது.
குயவனின்
கைகளில் இருந்து அப்போது தான் வெளிவந்த குடங்களைப் போல அவள் மார்புகள் ஈரமான வெதுவெதுப்போடு, வாளிப்பாய், காய்ந்தும்
காயாமலும் இருந்தன. கைபடாத, இளமை துள்ளும் அவள் மார்புகளுக்கு ஒரு புதுவிதமான ஒளி இருந்தது. இருந்தும்
இல்லாத மாதிரியான ஒளி. அந்த
மாநிற மார்புகளுக்குப் பின்னே ஒரு மங்கலான விளக்கு இருப்பது போல. அவளது
மார்புகளின் வடிவம், கலங்கலான
நதியின் மேல் மிதக்கும் களிமண் விளக்குகளை நினைவுபடுத்தியது.
அதே மழை நாட்கள். ஜன்னலுக்கு
வெளியே அரச மர இலைகள்
பட படவென
அடித்தன. அந்த
மராத்திப் பெண்ணின் ஈர உடைகள்
அழுக்குக் குவியலாகத் தரையில் இருந்தன. அவள்
ரந்தீரை இறுகக் கட்டிக் கொண்டிருந்தாள். நிர்வாணமான அவளது அழுக்கு உடலின் கதகதப்பு அவனுக்குள் ஏதேதோ உணர்ச்சிகளை உண்டு பண்ணியது. குளிர்
காலத்தில் நாவிதன் அழுக்கான, வெதுவெதுப்பான
நுரைகளைத் தடவும் போது ஏற்படும் உணர்ச்சி போல.
இரவு
முழுக்க அவள் ரந்தீரோடுப் பிணைந்திருந்தாள். இருவரும் உடலோடு உடல் ஒட்டி வைத்தது போல் ஆயினர். இரவு
முழுக்க இரண்டு வார்த்தைகள் கூடப் பேசியிருக்க மாட்டார்கள். சொல்ல வேண்டியது அனைத்தையும் உதடுகள், கைகள்
மற்றும் பெருமூச்சுகளால் அவர்கள் உணர்த்திக் கொண்டனர். இரவு
முழுவதும் ரந்தீரின் கைகள் அந்த மராத்திப் பெண்ணின் முலைகளின் மீது காற்றைப் போல் மென்மையாக அலைந்தன. அவளது
சிறிய முலைக்காம்புகளும் அவற்றைச் சுற்றி கருவளையமாய் உப்பி இருந்த சதையும் அவன் கைகள் பட்டவுடன் துடித்து எழுந்தன. அந்த
உணர்ச்சியில் அவள் உடல் தூக்கி வாரிப் போட்டது ரந்தீருக்கே நடுக்கத்தை ஏற்படுத்தியது.
அவன்
அந்த நடுக்கத்தை பல முறை
உணர்ந்தவன் தான்; அவனுக்கு
அந்த சுகத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். மிருதுவான, உறுதியான பல பெண்களின்
முலைகளைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி அவன் பல இரவுகளைக்
கழித்திருந்தான். வெளியாட்களிடம் சொல்லக்கூடாத குடும்ப
விஷயங்களை அவனிடம் சொல்லிய வெகுளிப் பெண்கள், எல்லா
வேலைகளையும் தானே செய்து அவனுக்கு கொஞ்சமும் தொந்தரவு தராத பெண்கள் – என்று பல பெண்களுடன்
உடலுறவு கொண்ட அனுபவம் இருந்தது. ஆனால்
புளிய மரத்தடியில் நனைந்தபடி நின்றிருந்த இந்த மராத்திப் பெண், அவன்
சைகை செய்து மேலே அழைத்தவள், வேறு
மாதிரியானவள்.
அவள்
உடலில் இருந்து ஒரு புதிரான வாசத்தை இரவு முழுவதும் ரந்தீர் முகர்ந்தான்; ஒரே சமயத்தில் நாற்றமாகவும், நறுமணமாகவும் இருந்த அந்த வாசத்தை அவன் ஆசை தீர முகர்ந்தான். அவளது அக்குள், தலைமயிர், முலைகள், முதுகு- எல்லா இடத்திலிருந்தும். ரந்தீரின் ஒவ்வொரு மூச்சிலும் அவள் வாசம் நிரம்பியது. அவளது
நிர்வாணமான உடலில் இருந்து வரும் அந்த வாசம் தான் தன்னை அவளுடன் இவ்வளவு நெருக்கமாக்கியது என்று ரந்தீர் நினைத்தான். அவனது
மனத்தின் அனைத்து சிடுக்குகளிலும் எண்ணங்களிலும் அந்த வாசம் பரவியது.
அந்த
வாசம் அவர்கள் இருவரையும் இணைபிரியாதவர்கள் ஆக்கியது. இருவரும்
ஒருவருக்குள் ஒருவர் நுழைந்தனர். இருவரும்
ஆழத்தில் விழுந்து பின் பரவசத்தின் சிகரத்தை ஒன்றாக அடைந்தனர். கணநேரமானாலும்
முடிவற்றதாய்த் தோன்றும், உச்சத்தில்
உறைந்து போனாலும் பறப்பது போல் தோன்றும் பரவசம்.
அவள்
தேகத்தின் ஒவ்வொரு துளையில் இருந்தும் வந்த அந்த வாசத்தை ரந்தீர் நன்கு அறிந்தான். ஆனால்
அந்த வாசத்தை வேறு வாசனை எதோடும் அவனால் ஒப்பிட முடியவில்லை. அது முற்றிலும் வித்தியாசமானதாய் இருந்த்து. அத்தர், ஜவ்வாது போன்றவற்றின் பொய்ப் பூச்சு அதில் இல்லை. ஆண் – பெண் உறவின் பிணைப்பு போல என்றென்றும் நிலைத்திருக்கும் உண்மையானதாக அது இருந்தது.
பொதுவாக ரந்தீருக்கு
வியர்வையின் வாசம் அருவெறுப்பூட்டும். குளித்தபின் அக்குளிலும் மற்ற இடங்களிலும் வாசனைப் பவுடரைப் பூசிக் கொள்வான்; இல்லை
என்றால் வேறு ஏதேனும் வாசனைத் திரவியத்தைத் தெளித்து வியர்வையின் வாசத்தை கட்டுப்படுத்தி வைப்பான். ஆனால்
இன்று தான் எந்தவித அருவெறுப்புமில்லாமல் இந்த மராத்திப் பெண்ணின் அக்குளை முத்தமிடுவது அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது. அருவெறுப்புக்குப்
பதில் ஒரு புதுவித கிளர்ச்சியை அவன் உணர்ந்தான். அவளது
மென்மையான அக்குள் மயிர் வியர்வையில் ஊறியிருந்தது. அதிலிருந்து வந்த வாசம் அவன் உள்ளுணர்வைத் தூண்டினாலும் ஒரு புதிராக இருந்தது. ரந்தீருக்கு
அந்த வாசம் தெரிந்தது, அதை
அடையாளம் காண முடிந்தது, அதன்
அர்த்தம் கூடப் புரிந்தது. ஆனால்
அதை இன்னொருவருக்குப் புரிய வைக்க முடியாது என்று அவன் உணர்ந்தான்.
அதே மழை நாட்கள். ஜன்னலுக்கு
வெளியே மழையில் நனைந்து படபடவென அடிக்கும் அரச மர இலைகளைப்
பார்த்தான். அவற்றின்
சத்தமும் காற்றின் ஓசையும் ஒன்றானது போல் இருந்தது. இருட்டாக
இருந்தது, இருட்டினூடே
வெளிச்சமும். மழைத்துளிகளோடு நட்சத்திரங்களின் வெளிச்சமும் கீழிறங்கியது போல. அந்த
மழை நாட்களில் ரந்தீரின் அறையில் ஒரே ஒரு தேக்கு மரக் கட்டில் தான் இருந்தது. இப்போது
அதன் அருகே இன்னொரு கட்டிலும் இருந்தது. அறையின்
மூலையில் ஒரு புது அலங்காரம் செய்து கொள்ளும் மேசையும் இருந்தது. அதே
மழை நாட்கள், அதே
பருவகாலம், மழைத்துளிகளுடன்
இறங்கும் நட்சத்திர வெளிச்சமும். ஆனால் காற்றில் இப்போது மருதாணியின் வாசம் பரவியிருந்தது.
அந்த
இன்னொரு கட்டில் காலியாக இருந்தது. ரந்தீர்
மழையில் நனையும் அரச மர இலைகளை
வேடிக்கை பார்த்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்த கட்டிலில் வெள்ளை வெளேரென்று ஒரு பெண் படுத்திருந்தாள். கைகளைக் கொண்டு நிர்வாண மார்பை மறைக்க முயன்று தோற்றுப் போய்த் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது சிகப்பு பட்டு சல்வார் இன்னொரு கட்டிலில் இருந்தது; அதன்
சிகப்பு நாடாவின் பட்டுக் குஞ்சலம் கட்டிலில் இருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது. அவளது மற்ற உடைகளும் அந்தக் கட்டிலில் இருந்தன; அவளது
பிரா, உள்ளாடைகள், சரிகைப் பூப் போட்ட கமீஸ், அவளது
துப்பட்டா – எல்லாம் கண்ணைப் பறிக்கும் சிகப்பில். நாசியைத்
துளைக்கும் மருதாணி வாசம் அந்த உடைகளில் எல்லாம் பரவியிருந்தது. சின்ன சமிக்கித் துகள்கள் அவளது தலைமுடியில் தூசு போல் ஒட்டிக் கொண்டிருந்தன. சமிக்கி, கன்னச்சாயம், உதட்டுச்சாயம் எல்லாம் அவள் முகத்தில் ஒன்றாய்க் கலந்து ஒரு வெளுத்த உயிரற்ற வண்ணத்தைக் கொடுத்தன. பிரா
பட்டைகள் அவளது வெண்ணிற மார்பில் அழுத்திய தழும்பு தெரிந்தது.
அவளது
முலைகள் பால் போல வெண்மையாய், இடையே
சற்றே நீலம் பாரித்தது போல இருந்தது. சுத்தமாகச்
சிரைக்கப் பட்டிருந்த அவளது அக்குள் கண்மையை அப்பி வைத்தது மாதிரி இருந்தது. “இப்போது தான் அட்டைப் பெட்டியில் இருந்து எடுத்த புத்தகக் கட்டு மாதிரி அல்லது பளிங்கு மாதிரி இருக்கிறாள். அவற்றில் இருக்கும் தழும்புகள் மாதிரி தான் இவள் உடம்பிலும் இருக்கிறது” என்று
ரந்தீர் நினைத்தான்.
உடலோடு
இறுக்கமான அவள் பிராவின் பட்டையை ரந்தீர் தான் கழற்றியிருந்தான். அதன் தடங்கள் அவளது மிருதுவான முதுகிலும் மார்பிலும் தெரிந்தன. இடுப்பில்
நாடாவை இறுக்கிக் கட்டியிருந்த தடம் தெரிந்தது. தடித்த
சங்கிலிகளின் கூர் முனைகள் அவள் மார்பில் நகக்குறி போல் தடம் பதித்திருந்தன. அதே மழை நாட்கள். மழைத்
துளிகள் அரசமரத்தின் மெல்லிய இலைகளில் தெறிக்கும் சத்தம் அந்த இரவு முழுவதும் ரந்தீர் கேட்டது போலவே இருந்தது. பொருத்தமான
பருவம்; குளிர்
தென்றல் வீசியது; ஆனால்
மருதாணியின் தூக்கலான வாசம் அவற்றில் கலந்திருந்தது.
ரந்தீரின்
கைகள் இந்த வெளுத்த பெண்ணின் பால் வண்ண முலைகளின் மீது காற்றைப் போலப் பரவின. அவளது
மென் தேகம் அவன் தொடுகையில் நடுங்கியது. அவளை
நெஞ்சோடு அணைக்கையில் அவள் மேனியின் ஒவ்வொரு துடிப்பும் அவனுக்குக் கேட்டது. ஆனால்
அந்த உயிர்த்தவிப்பு எங்கே? அந்த
மராத்திப் பெண்ணின் வாசத்தில் அவன் முகர்ந்த தவிப்பு, பாலுக்காக
அழும் குழந்தையின் தவிப்பைக் காட்டிலும் வீரியமான தவிப்பு, அடித்
தொண்டையில் இருந்து எழுந்து குரலின் உச்சத்தையும் தாண்டி கேட்காமல் போகும் தவிப்பு – அது எங்கே?
ரந்தீர்
ஜன்னல் கம்பிகள் ஊடே வெளியே பார்த்தான். அரசமரத்தின்
இலைகள் அவனுக்கு அருகில் படபடவென அடித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவன் அதைத் தாண்டி வெகு தூரத்தில் கரு மேகங்கள் ஊடே தெரிந்த மங்கலான ஒளியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மராத்திப் பெண்ணின் மார்பில் அவன் பார்த்த ஒளி, தெரிந்தும்
தெரியாமல் இருக்கும் ரகசியத்தைப் போன்றதொரு ஒளி.
ரந்தீரின்
கைகளில் பாலும் வெண்ணையும் கலந்து பிசைந்த மாவு போல மென்மையான தேகம் கொண்ட வெள்ளை வெளேரன்ற பெண் இருந்தாள். அவளது
தேகத்தின் ஒவ்வொரு துளையிலிருந்தும் காய்ந்த மருதாணி வாசம் வீசியது. ரந்தீருக்கு
அந்த வாசம் ஒரு மனிதனின் கடைசி மூச்சு போல, புளித்த
ஏப்பம் போல குமட்டியது. வெளிறிப்
போய். சோகமாய். சந்தோஷமில்லாமல்.
ரந்தீர்
தன் கைகளில் இருந்த பெண்ணைப் பார்த்தான். அவன்
கண்ணுக்கு அவள் உயிரற்ற, வெள்ளைப் பிண்டங்கள் வெளிறிய நீரில் மிதக்கும் திரிந்த பால் போலத் தெரிந்தாள். அவளது
பெண்மை அவனைச் சலனப்படுத்தவில்லை. அவனது மனமும் உடலும் அந்த மராத்திப் பெண்ணின் இயற்கையான வாசத்தில் மூழ்கியிருந்தன. மருதாணியை விடப் பல மடங்கு
கிளர்ச்சியூட்டக்கூடிய அந்த வாசம்; பயப்படாமல்
அவன் முகர்ந்த வாசம்; தானாக
அவனுள் நுழைந்து தன் நோக்கத்தை நிறைவேற்றிய அந்த வாசம்.
ரந்தீர்
கடைசியாக ஒருமுறை இந்தப் பெண்ணின் பால்வண்ணத் தேகத்தைத் தொட முயன்றான். ஆனால்
அவன் உணர்ச்சிகள் தூண்டப்படவில்லை. பி.ஏ. வரை படித்திருந்தவள், முதன்மை நீதிபதியின் மகள், கல்லூரியில்
அனைவரின் கனவுக் கன்னி, புதுக்கருக்குக்
குலையாத அவன் மனைவி, அவனது
நாடித் துடிப்பைத் தூண்டவில்லை. காய்ந்து போன மருதாணியின் வாசத்தில் - அந்த மழை நாட்களில், ஜன்னலுக்கு
வெளியே அரசமர இலைகள் நனைந்த வேளையில் - அந்த அழுக்கு மராத்திப் பெண்ணின் உடலில் அவன் முகர்ந்த வாசத்தைத் தேடினான்.
2 comments:
பிரமாதமான மொழிபெயர்ப்பு, நன்றி
அருமை,, வாழ்த்துக்கள்.. 📚📘🇨🇭📒
Post a Comment