Sunday, February 07, 2016

ஊதாக் கலரு ரிப்பன்

நள்ளிரவில் கைபேசியில் சங்க இலக்கியங்களை tamilvu.org தளத்தில் படித்துக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது அந்தக் கவிதை. படிக்கப் படிக்க ஒரே ஆச்சரியம், மகிழ்ச்சி. எதையோ தேடும் போது எதுவோ கண்ணில் பட்டது போல. அந்தக் கவிதை போன்றே ஒரு திரைப் பாடல் இரண்டு வருடங்களுக்கு முன் பட்டி தொட்டியெங்கும் சக்கைப் போடு போட்டது. இதெல்லாம் ஒரு பாட்டா என்று திட்டிக் கொண்டே கேட்ட  பாட்டு. காலை எழுந்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கினேன்.

அதிகாலையில் மனைவியை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்துவிட்டு, காய்கறி வாங்கி, பிள்ளைகளை எழுப்பும் போதெல்லாம் மனதில் அகநானூறு பாடல் எண் 8 ஓடிக் கொண்டிருந்தது.

வேலைகளை முடித்துவிட்டு கணிணியில் பார்த்தால் அகம்.8 வேறு பாடல். நான் பார்த்த பாடல் இல்லை. சொல் தேடல் மூலம் தேடிப் பார்த்தாலும் நான் பார்த்த பாடல் அகநானூறிலேயே இல்லை என்றது. ஒருவேளை புறநானூறா? அதிலும் இல்லை. பாடல் வரிகள் மனதில் இருந்தன. ஆனால் பாடல் கண்ணில் படவில்லை. உ.வே.சா. போல் தேடி அலைந்து திரிய வேண்டுமா?

முனைவர்.ப.பாண்டியராஜா அவர்கள் உருவாக்கியுள்ள சங்க இலக்கியத் தொடரடைவுகள் (Concordance List) கைகொடுத்தது. நான் ஒரு சொல்லைத் தவறாக ஞாபகம் வைத்திருந்ததால் அதிலும் சற்று நேரமெடுத்தது.  இறுதியாகக் கண்டுபிடித்தேன். அது நற்றிணை பாடல் 8. இரவு தூக்கக் கலக்கத்தில் எப்படியோ அகநானூற்றுக்கு நடுவே இந்தப் பாடலை எப்படியோ படித்திருக்கிறேன்.

அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
   
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
   
திரு மணி புரையும் மேனி மடவோள்
   
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
   
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5
   
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
   
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
   
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
   
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
   
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!

உரை: மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தக் கூடிய செவ்வரி பரந்த குளிர்ந்த கண்களும், பல்வேறு பூக்களால் தொடுக்கப்பட்ட தழையை உடையாக அணிந்த இடையும், நீலமணியைப் போல் மேனியும் உடைய இந்த இளமகள் யார் புதல்வியோ? அசையாத உள்ளம் கொண்ட என்னையே துன்புறுத்துகிறாள். இவள் தந்தை நெடுங்காலம் வாழ்க. அகன்ற வயலில் உழவர்களால் கதிர் அறுக்கப்பட்டு சேற்றுடன் கொண்டு வரப்படும் நெற் போரிலும் நெய்தல் பூ பூக்கும் வளமுடைய் சேர மன்னனின் தொண்டி நகரம் போல் எல்லா வளமும் பெற்று வாழட்டும் இவள் தாய்.

என் மகளிடம் உரையைக் கூறி எந்தப் பாடல் ஞாபகத்துக்கு வருகிறது என்றேன். வாய் கொள்ளா சிரிப்புடன் அவளும்

 ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
 ஏ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்
 ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
 ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்
 நான் நினைத்த பாட்டையே கூறினாள். 

Saturday, January 09, 2016

4 கலாப்ரியா கவிதைகள் - 4 Poems of Kalapria

தூண்டில் மீனின்
துடிப்புகளைப் பாடுவதற்காய்
மட்டுமே நான்
ஆற்றோரம் காத்திருக்கிறேன்
அரை நிர்வாணிகளுக்காயில்லை
 
It's only
to voice the struggles
of hooked fish,
I wait in river banks
Not for half naked women. 
 
-------------------------------------------
 
ஒப்பனைகளை
அழித்துவிட்டு
என்னுடைய 
நாடகத்தை
நானே 
என்று பார்க்க
 
Removing 
the greasepaint 
to see my play 
myself, 
when's the day?
 
-------------------------------------------
பயணம்
 
கூட்டிலிருந்து
தவறி விழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப்போலவே 
தானும் பறப்பதாய்
நினைத்தது.
தரையில் மோதிச்சாகும்வரை.
 
Travel
 
The baby bird
that fell out
of its nest
thought 
it flew
just like its mom.
Till crashing dead on the floor. 

------------------------------------------- 
 விதி
 
அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை தெரியவில்லை.

Fate
 
In dark sundown,
this lost
female bird,
in search of its nest,
cries desperately.
I know its nest,
its nestlings,
But 
its language,
I don't know.

------------------------------------------- 

Kalapria is one of the new wave of poets who started writing in 1970s. He is popular among the readers of contemporary Tamil literature. He is well known for his metaphors fashioned out of day to day life. His poems are perfectly crafted and paint a picture to the reader.

Tamil version of the poems were taken from here.

Wednesday, January 06, 2016

வேட்டி

இன்று வேட்டி தினமாம். டிவிட்டரில் தெரிந்து கொண்டேன். ராம்ராஜ் நிறுவனத்தின் வியாபார தந்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் சகாயம் இ.ஆ.ப (IAS)  கோ ஆப்டெக்ஸ் கூட்டுறவின் தலைவராக இருக்கும் போது கொண்டு வந்த முயற்சியாம் இது.

கிட்டத்தட்ட வாரத்தின் பாதி நாட்களில் வேட்டி கட்டுபவன் நான். சமீப காலமாக நாற்பதை நெருங்கிய பின்  இது அதிகரித்திருக்கிறது.

நான் கீழக்கரை கல்லூரியில் பொறியியல் படிக்கப் போகும் வரை வேட்டி கட்டியதில்லை. சென்னையில் இருந்து கீழக்கரை அதிக தூரம் என்பதால் சிறு விடுமுறைகளுக்குக் கோனாபட்டில் இருக்கும் பெரியப்பா வீட்டிற்குப் போவது வழக்கமாயிற்று. பெரியப்பா பள்ளித் தலைமை ஆசிரியர். ஊரிலேயே இருந்ததனால் அடிக்கடி விசேஷ வீடுகளுக்குப் போய் வர வேண்டி வரும். கூடவே என்னையும் அழைத்துப் போவார், கண்டிப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்ற கட்டளையுடன். அப்படித் தான் வேட்டி கட்டப் பழகியது.

ஊருணியில் குழந்தைகளுடன்
ஊரிலேயே திருமணமும் நடை பெற்றதால் ரிசப்ஷனுக்கு கோட் சூட் போட வேண்டிய அபாயத்தில் இருந்து தப்பித்தேன். அதற்கும் வேட்டி சட்டை தான்.

மீண்டும் சென்னை வந்த பின் சில வருடங்கள் பொங்கல், தீபாவளி அன்று மட்டும் வேட்டி கட்டி வந்தேன். நாள் ஆக ஆக வேட்டி கட்டுவது மிக சவுகரியமானது என்ற முடிவுக்கு வந்தேன். வேட்டி அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதும் பழகிப் போனது.

சென்னையில் பல உயர் உணவகங்களுக்கு வேட்டியுடன் போயிருக்கிறேன். சற்று வித்தியாசமாகப் பார்ப்பார்கள், அவ்வளவு தான். எங்கும் அனுமதி மறுக்கப் பட்டதில்லை. 5 நட்சத்திர விடுதிகளுக்குப் போனதில்லை.

பொதுவாகப் பருத்தி வேட்டிகள் மட்டுமே வாங்குவது வழக்கம். என் திருமணத்தன்று மட்டும் தான் பட்டு வேட்டி கட்டியிருக்கிறேன். பட்டு வேட்டி கட்டுவது என்பது சென்னையின் கசகசப்பில் வேண்டாத ஒரு செயல். வெளியிடங்களுக்குக் கட்டி செல்ல ராம்ராஜ் வேட்டியும் வீட்டில் கட்டிக் கொள்ள நாகர்கோயில் வடசேரி வேட்டியும் தான் என்னுடைய தேர்வு.

வேட்டி கட்டிக் கொள்வதால் பாரம்பரியம் காக்கிறேன் என்றெல்லாம் கதை விடப் போவதில்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, வசதியாக இருக்கிறது; வேறென்ன காரணம் வேண்டும்?


Tuesday, December 15, 2015

புழக்கத்தில் இருக்கும் பழந்தமிழ்ச் சொற்கள் - அசனம்

திருத்தம்:
1. இந்தப் பதிவு முதலில் சங்கச் சொற்கள் என்று தவறாகத் தலைப்பிடப் பட்டிருந்தது. ஏலாதி நூல் பதிணென்கீழ்க் கணக்குத் தொகையில் வருவது. சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலம். அதனால் சங்கம் என்பதைப் பழந்தமிழ் என்று மாற்றி விட்டேன்.

2. அசனம் என்பது வடமொழிச் சொல் என்று பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

அசனம் என்ற சொல்லை நான் முதலில் கேட்டது நான்கு வருடங்களுக்கு முன்பு தான். என் கூட வேலை பார்த்த அந்தோணிசாமி அண்ணன் தான் கூறினார் “அண்ணே, இந்த வருஷம் புளியம்பட்டி அந்தோணியார் கோயில் திருவிழால அசனம் வச்சிருக்கோம். நீங்க கண்டிப்பா வரணும்”

புளியம்பட்டி அந்தோணியார் கோயில் தூத்துக்குடி - திருநெல்வேலி கிறித்தவர்கள் மத்தியில் புகழ்பெற்றது. ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஜோ டி குரூஸ் எழுதிய ‘ஆழி சூழ் உலகு’ நாவலில் கூட வரும். ஆனால் அசனம் என்ற சொல் புதிதாக இருந்தது. இந்தப் பக்கங்களில் போர்த்துகீசியர் தாக்கத்தில் பல சொற்கள் இருக்கும். அது போல ஒரு புதிய சொல் என்று நினைத்தேன்.

“சரிண்ணே. வந்துடறேன். அசனம்ன்னா என்னண்ணே”

“உங்க கோயில்ல எல்லாம் அங்க வச்சு சமைச்சு சாப்பாடு போடறீங்கள்லண்ணே ,அது மாதிரி ஊர்லருந்து வண்டி கட்டிட்டுப் போய் அங்க கோயில் பக்கத்தில வச்சு சமைச்சு எல்லாருக்கும் சாப்பாடு போடறது. அன்ன தானம்னு வச்சுக்கங்களேன்”

எங்களூர் மலையக்கோயிலில் ’வடிச்சுப் போடுவது’ போல என்று நினைத்துக் கொண்டேன். திருவிழாவும் மலையக்கோயில் தைப்பூசம் போல் தான் இருந்தது. பாகு ஊறிய கருப்பட்டி மிட்டாயும், அசனம் என்ற சொல்லும் நினைவில் நின்றன.

சில மாதங்களுக்கு முன்பு tamilvu.org தளத்தில் பழந்தமிழ் இலக்கியங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது பதிணென் கீழ்க் கணக்கில் ’ஏலாதி’ தென்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் மிகக் குறைவே தெரியும். அதிலும் இதைப் படித்ததே இல்லை. சரி படித்துப் பார்ப்போமே என்று ஆரம்பித்தேன். அறிவுரை நூல் தான். அதில் மீண்டும் தென்பட்டது ‘அசனம்’

எள்ளே, பருத்தியே, எண்ணெய், உடுத்தாடை,
வள்ளே, துணியே, இவற்றொடு, கொள் என,
அன்புற்று, அசனம் கொடுத்தான்-துணையினோடு
இன்புற்று வாழ்வான், இயைந்து.

உரை : எள்ளே - எள்ளும், பருத்தியே - பஞ்சினாலாகிய அரை ஞாணும், எண்ணெய் - எண்ணெயும், உடுத்து ஆடை - உடுத்தும் ஆடையும், வள்ளே - பணமும், துணியே - போர்வையும், இவற்றோடு - ஆகிய இவற்றுடன், அசனம் - உணவும், கொள் என்ன - ஏற்றுக்கொள்வீர்களாக வென்று சொல்லி, அன்புற்று கொடுத்தான் - அன்புகூர்ந்து கொடுத்தவன், துணையினோடு இயைந்து - தன் மனைவி முதலிய சுற்றத்தாரோடு கலந்து, இன்புற்று வாழ்வான் - இன்பம் பொருந்தி வாழ்வான்.

எனக்குப் புதிதாகத் தெரிந்த சொல், இரண்டாயிரம் ஆண்டுகளாக அதே அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. நாஞ்சில் நாடன் சொல்வது போல வட்டார வழக்கு என்று சற்று இளக்காரமாக அழைக்கப்படும் வழக்குகள் தான் தமிழ்ச் சொற்களைப் பாதுகாத்து வருகின்றன.

tamilnation வலைத்தளத்தில் படித்த மேற்கோள் நினைவுக்கு வருகிறது “தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் உள்ளது”.

Friday, October 23, 2015

சிவவாக்கியரும் பாரதியும்

தமிழ் இலக்கியத்தில் சித்தர் பாடல்கள் ஒரு தனி இழை. எத்தனை சித்தர்கள் இருந்தார்கள், பதிணென் சித்தர்கள் யார் யார் என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. பொதுவாக இவர்கள் பாடல்கள் பெருமதங்களுக்கு எதிரான கருத்துக்களை நிறுத்துபவை.

சித்தர்களில் சிவவாக்கியர் சற்று தனித்து நிற்பார். எளிமையான சொற்கள், சட்டென்று பற்றிக்கொள்ளும் ஒரு தாளம், கூர்மையான சமூக விமர்சனம் ஆகியவை இவரது பாடல்களின் தனித்துவம். உருவ வழிபாட்டைத் தன் பாடல்களில் பலவாறு கிண்டல் செய்தவர். அவற்றில் ஒரு பாடல்

ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே
ஒரு கல்லை இரண்டாய் உடைக்கிறீர்கள். அவற்றில் ஒன்றை வாசலில் பதித்து மிதிக்கிறீர்கள். இன்னொன்றைக் கடவுள் எனச் சிலை செய்து கும்பிடுகிறீர்கள். இவற்றில் ஈசனுக்குகந்த கல் எதுவென்று கிண்டல் செய்கிறார்.

பாரதியும் இந்த இரண்டு கல் கோட்பாட்டைக் கையிலெடுக்கிறான். ஆனால் அவனுக்குச் சக்தி தெய்வம்.  அதனால் தான் பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகத்தில் பராசக்தியை வணங்கும் போது

ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
  றமைறைத்தனன் சிற்பி,மற்றொன்
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
  றுயர்த்தினான், உலகினோர் தாய்நீ;
யாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
  கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
  இருங்கலைப் புலவனாக் குதியே
என்று பாடுகிறான்.

 சிற்பி ஒரு கல்லை வாயிற்படி என்று மறைத்தான். இன்னொன்றைக் கடவுளின் வடிவமென்று உயர்த்தினான்.  நீ எல்லோருக்கும் தாய். யாரை எங்கே, எப்படி வைக்க வேண்டுமென்று உனக்குத் தெரியும். அதனால் உன்னைச் சரணடைந்தேன், என்னைப் புலவனாக்கு என்று வேண்டுகிறான்.

இன்று நான் இருக்கும் மனநிலையில் நான் சிவவாக்கியர் பக்கம் தான். ஆனால் இரண்டு பாடல்களையும் படிக்கும் போது பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடலின் எதிரொலி இருபதாம் நூற்றாண்டுப் பாடலில் கேட்பது மகிழ்ச்சியாக இருந்தது. இருபத்தி ஓராம் நூற்றாண்டில் கேட்குமா என்பது சந்தேகம் தான்.