Wednesday, January 14, 2015

புத்தகத் திருவிழா 2015 - 1

பெருமாள் முருகன் புத்தகங்களை வாங்குவதென்ற முடிவுடன் தான் உள்ளே போனேன். ஒரு வேளை காலச்சுவடு விற்பதில்லை என்றால் என்ன செய்வதென்று முதலில் இருந்த நியூ புக் லாண்ட்ஸ் அரங்கிலேயே மாதொரு பாகன், அர்த்தநாரி, ஆலவாயன் வாங்கிவிட்டேன். கடையில் இருந்தவர் கூளமாதாரி, ஆளண்டாபட்சி வாங்கப் பரிந்துரைத்தார்.”இல்லைங்க, அது ரெண்டும் இருக்கு” என்றவாறு நகர்ந்தேன். நேற்றுத் தான் உடுமலை.காம்மில் வாங்கினேன்.

கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காலை பதினொரு மணிக்கே போய்விட்டேன். அவ்வளவாக யாரும் இல்லை, பொறுமையாகப் பார்க்க முடிந்தது. உயிர்மையில் அந்நிய நிலத்தில் ஒரு பெண் வாங்கும் முடிவோடு தான் போனேன், ஆனால் ஏனோ வாங்கத் தோன்றவில்லை. யுவன் சந்திரசேகரின் மணற்கேணி மட்டும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன்.

வண்ணநிலவன் கவிதைகள் கண்ணில் பட்டது. புரட்டிக் கொண்டிருந்த போது அய்யனார் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். இருபது ஆண்டுகளுக்கு முன் அன்னம் வெளியீடாக கவிஞர் மீரா கொண்டுவந்த நவகவிதை வரிசையில் வெளிவந்த கவிதைகளை இப்போது மீண்டும் பதிப்பித்திருப்பதாகக் கூறினார். அத்துடன் சுந்தர ராமசாமி அய்யனாருக்கு எழுதிய கடிதங்கள், அய்யனார் எடுத்த நேர்காணல்கள் மற்றும் சென்னை - சில சித்திரங்கள் ஆகிய நான்கு புத்தகங்களும் சேர்த்து 110 ரூ. தான் என்றார். வாங்கிக் கொண்டேன்.

தமிழ்ச் செம்மொழி நிறுவனத்தில் (Central Institute of Classical Tamil) குறுந்தொகை - Kuruntokai Text, Transliteration and Translation கழிவு போக வெறும் 480 ரூ. மொழி பெயர்த்தவர்கள் பட்டியலில்  A K Ramanujan, George L Hart இருந்ததால் வாங்கினேன். நூலகத்தில் இருக்கும் தரத்தில் அருமையான பதிப்பு. கண்டிப்பாக வாங்கவும்.

சாகித்திய அகாடெமி அரங்கில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள். செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி)  மற்றும் ப.ஜீவானந்தம் நூல் திரட்டு வாங்கினேன். கிழக்குப் பதிப்பகம் பிரம்மாண்டமான அரங்கு. உள்ளே சென்று சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பினேன்.

காலச்சுவடில் எதிர்பார்த்தது போல மாதொரு பாகன் விற்பனைக்கில்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால் பெருமாள் முருகனின் மற்ற நூல்கள் இன்று விற்பனையில் இருந்தன. நாளை தெரியாது. கார், மிண்ணனு சாதன நிறுவனங்கள் பழுதான பொருட்களைத் திரும்பப் பெற Reverse Logistics வைத்திருப்பது போல தமிழ்ப் பதிப்பகங்களும் ஆரம்பிக்கலாம். பூமணியின் வெக்கை, பிறகு, கிழிசல் செட்டாக வாங்கினேன். பொய்த்தேவு (க.நா.சு.) இரண்டு விரல் தட்டச்சு (அசோகமித்திரன்), காதுகள் (எம்.வி.வெங்கட்ராம்) காலச்சுவடில் வாங்கிய மற்ற புத்தகங்கள். தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு ரொம்ப யோசித்துவிட்டு வாங்கவில்லை. அநேகமாக நாளைக்கு வாங்குவேன்.

தமிழினியில் வாங்கியவை கிருஷ்ணப்பருந்து (ஆ மாதவன்), நிறைசூலி (மகுடேசுவரன் கவிதை). 

இதற்குள் மதியம் 1 மணி ஆகி கூட்டம் வரத் துவங்கியதால் வீடு திரும்பிவிட்டேன். புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வாகன நிறுத்துமிடம் வரக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது. நாளை, நாளை மறுநாள் நல்ல கூட்டம் இருக்கும். காலையிலேயே சென்றுவிடுதல் நலம்.

No comments: