Monday, June 16, 2014

கண்ணீர்

”பசங்கள இன்னிக்கு நீ தூங்க வை, எனக்கு ஒரு அரை மணி நேரம் வேலை இருக்கு, நாளைக்கு கிளையண்ட் மீட்டிங்குக்கு” என்ற படி அடுத்த அறைக்குச் சென்றாள் மனைவி.

பையனைத் தூங்க வைக்க கதை சொல்ல வேண்டும். மருது பாண்டியர், அலெக்ஸாண்டர், ஜெஸ்ஸி ஓவன்ஸ், ராஜ ராஜ சோழன், சச்சின் டெண்டுல்கர் என கலந்து கட்டி எனக்குத் தெரிந்த வரலாற்றைச் சொல்வது வழக்கம்.

இன்றைக்கு ஏனோ அவன் கதை கேட்கவில்லை. விளக்கை அணைத்தவுடன் “நாளைக்கு ஏந்தான் மண்டே வருதோ, ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கல” என்றான்.

”ஏன், உனக்குத் தான் ஸ்கூல் போக பிடிக்குமே, இப்ப மட்டும் என்ன” என்று கேட்டேன்.

“இல்ல, ஸ்கூல் இல்லைன்னா நாளைக்கு ஃபுல்லா உங்களோடயே இருக்கலாமில்ல” என்றான்.

“அது சரி, இப்ப தூங்கு”.

ஐந்து நிமிடங்களில் கேவிக் கேவி அழும் சத்தம். என்னமோ ஏதோ என்று எழுந்து பார்த்தால் அவன் கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர்.

“ஏண்டா அழறே. என்ன ஆச்சு, கால் வலிக்குதா”

“இல்ல”

அந்தப்பக்கம் படுத்திருந்த மகள் கேட்டாள், “ தலைய கட்டில்ல இடிச்சுகிட்டியா”

“அதெல்லாம் இல்ல”

”அப்ப என்ன தான் ஆச்சு” என்று அவன் கண்ணைத் துடைத்த படி கேட்டேன்.

“இல்ல, வயசானா எல்லாரும் செத்துடுவாங்கள்ல, நீங்களும் சாகுவீங்கள்ல, அப்புறம் நான் உங்கள எப்படி பாப்பேன்? நீங்க என்ன விட்டுப் போயிடுவீங்கள்ல” என்று கண்ணீருக்கிடையே திக்கித் திக்கிச் சொன்னான்.

ஏழு வயதில் சாவைப் பற்றி யோசித்திருக்கிறான். என்ன சொல்லி சமாதானப் படுத்துவது?

“நீ அதுக்கெல்லாம் கவலைப் படாதடா. இன்னும் நாப்பது அம்பது வருஷம் ஆகும். அது வரைக்கும் அப்பா உன்னோட தான் இருப்பேன். இப்ப அழாத” என்று கட்டியணைத்த படி முதுகைத் தடவிக் கொடுத்தேன். அந்தப் பக்கமிருந்து மகள் மெதுவாக என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

1 comment:

Sivakumar Myleri said...

Nice one :-)