Tuesday, January 21, 2014

கரும்புனல் - ராம்சுரேஷ்

ஒன்றுபட்ட பீஹார் மாநில நிலக்கரிச் சுரங்கங்களை களமாகக் கொண்ட நாவல். வித்தியாசமான களத்துக்காகவும், எழுத்தாளரின் வலைப்பதிவை பல வருடங்களாகப் படித்து வருவதாலும் வாங்கிய புத்தகம் இது.

அதிகாரத்தின் அசுரத்தனத்திற்கு முன் எளிய மக்கள் பந்தாடப்படுவது தான் கதை. கதையின் மையம் பழங்குடி கிராம மக்களின் நிலத்தை சுரங்கத்திற்காக கையகப் படுத்துவது தான்.  அதற்காக பிரசாரத்தனமான முற்போக்குக் கதை எல்லாம் இல்லை. அந்த கிராம மக்களும் தங்கள் நிலத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடவில்லை. எப்படியும் அரசாங்கம் நிலத்தை எடுத்துக் கொள்ளும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்குப் பதிலாகத் தங்களுக்குத் தரப்படும் நஷ்ட ஈட்டை அதிகப் படுத்தும் முயற்சியிலேயே அவர்கள் ஈடுபடுகிறார்கள். அரசு வக்கீலாக ஊருக்குப் புதிதாய் வரும் சந்திரசேகரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. கோல் இந்தியா நிறுவன அதிகாரி வர்மா, தாசில்தார் பானர்ஜி, படித்த ஆதிவாசிப் பெண் தீபா, முரட்டு ஆதிவாசி லோபோ என்று அனைத்துக் கதாபாத்திரங்களையும்  சந்திரசேகரின் எண்ணவோட்டங்களின் மூலமே நிறுவுகிறார்.

சிறிய நாவல் தான். ஒரே மூச்சில் இரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். குறைந்த வார்த்தைகள் கொண்டு நிலக்கரி சுரங்கங்களையும், அந்தப் பகுதிகளின் நூற்றாண்டு காலத் தேக்கத்தைப் பற்றியும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். கொல்கத்தா, ராஞ்சி, சாஹஸ் என அனைத்து மட்டத்திலும் நிலவும் ஊழல்களை கதைப் போக்கிலேயே வெளிச்சப் படுத்தியிருக்கிறார். சரளமான நடை, இயல்பான உரையாடல்கள் மூலம் வாசகனைக் கதைக்குள் எளிதாகக் கொண்டு வந்துவிடுகிறார்.

ராம்சுரேஷ் வேலை பார்த்த களமாதலால், துறை சார்ந்த விவரிப்புகளின் நம்பகத்தன்மை கூடுகிறது. முதல் முறை சுரங்கத்துக்குள் சென்று மூச்சுத் திணறுமிடத்தில் நான் முதல் முறை பாய்லை சூப்பர் ஹீட்டர் காயில் பார்க்கத்தனியாகச் சென்று வெளியே வர முடியாமல் தவித்த ஓரிரு நிமிடங்களின் மரண பயம் நினைவில் வந்து சென்றது.

படிக்க சுவாரசியமான நாவல் தான். ஆனால் இதன் அமைப்பில் எனக்கு ஏதோ இடறுகிறது. (நாவலைப் படிக்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்). அரசாங்க ஊழல் தான் அனைத்திற்கும் காரணம் என்பது போல் கொண்டு போய்விட்டு கடைசித் திருப்பமாக ஜாதி சார்ந்த தனிப்பட்ட பகை என்று கொண்டுவந்திருப்பது நாவலின் தீவிரத்தைக் குறைத்தது போல் எனக்குத் தோன்றியது. ஆரம்பத்தில் வர்மாவின் ஜாதிப்பற்றைப் பற்றி கோடி காட்டியிருக்கிறார் தான், இருந்தாலும் ’சிட்டிசன்’ திரைப்படம் போல ஊரையே அழிக்க முயல்வது எல்லாம் ஊழலைப் பற்றிய நாவல் என்ற அமைப்பில் பொருந்த மறுக்கிறது.  இதன் காரணமாக, இறுதியில் வரும் சோகம் ஒட்டவில்லை.

என் மனைவி நான் பாதி படித்துக் கொண்டிருக்கையில் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி (கேட்டால் மறுக்க முடியுமா என்ன) ஒரே மூச்சில் படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னார். நான் படித்து முடித்த பிறகு, இந்த அமைப்பியல் சிக்கலை(?)ப் பற்றி விவாதித்ததிற்கு அவருடைய பதில் “ஒரு வேளை நிஜமாகவே அப்படி நடந்திருக்கலாம், இல்லையா?”.  இருக்கலாம்.

இந்த நாவலின் அடிப்படையில் ராம்சுரேஷின் அடுத்த நாவலைக் கண்டிப்பாக வாங்கிப் படிப்பேன்

கொளுத்திப் போடுதல்: ஜெயமோகன் வெண்முரசு, வெள்ளையானை, வெண்கடல் என வெள்ளையாக எழுதிக் கொண்டிருப்பதற்கு எதிர்க்குரலா இந்தக் கரும்புனல் ;-)

2 comments:

maithriim said...

It is so uncanny that my book review is so much similar to yours! :-) Please do read mine http://twitlonger.com/show/n_1s00fl1

amas32

Anonymous said...

உங்கள் விமர்சனத்திற்கு மிகவும் நன்றி