Saturday, July 06, 2013

செம்புலப் பெயநீர்

குறுந்தொகையில் உள்ள ”செம்புலப் பெயநீர்” பாடல் அதிகம் அறியப்பட்ட ஒன்று.

யாயு ஞாயும் யாரா கியரோ 
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே

என் தாயும் உன் தாயும் எப்படி உறவினர் ஆவர்? என் தந்தையும் உன் தந்தையும் எவ்வழியில் உறவினர்கள்? நானும் நீயும் இதற்கு முன் ஒருவரை ஒருவர் அறிந்ததில்லையே? இருந்தும் செம்மண்ணில் பெய்யும் மழை போல நம் காதல் நெஞ்சங்கள் கலந்தனவே.

இந்தப் பாடலைக் கிண்டல் செய்து கவிஞர் மீரா எழுதிய கவிதை


உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவினர்-மைத்துனன்மார்கள்
செம்புலப் பெயநீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே.

இது வெறும் புத்திசாலித்தனமான கிண்டல் கவிதையாகவே தோன்றியது, தர்மபுரி இளவரசன் - திவ்யா காதல், மோதல், சாதல் பற்றிப் படிக்கும் வரை.  மீராவின் கவிதை குறிப்புக் காட்டி, சொல்லாமல் விட்ட வார்தைகளுக்காக இப்பொழுது மிகவும் கனமான கவிதையாகத் தெரிகிறது.

அவர் சொன்னது

நீயும் நானும் ஒரே குலம்
செம்புலப் பெயநீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே.

சொல்லாமல் விட்டது

நீயும் நானும் வெவ்வேறு குலம்
சுடும்பாறைப் பெயநீர் போல
அன்புடை நெஞ்சம் தான்காய்ந்தனவே

No comments: