Thursday, April 18, 2013

மூங்கில் காடுகள்

எந்த மடையனாவது சித்திரை வெயிலில் பகல் நேரப் பேருந்துப்பயணம், அதுவும் பத்து மணி நேரம், திட்டமிடுவானா? என் திட்டத்தை எண்ணி என்னை நானே வைது கொண்டேன். வேலூரில் ஒரு வேலை, உடுமலையில் ஒன்று. இரண்டையும் ஒன்றாக இணைத்த போது இந்த வெயிலைப் பற்றி நினைக்கவில்லை.

மதியம் பன்னிரண்டு மணிக்கு வேலூரில் இருந்து சேலம் செல்லும் பேருந்தில் ஏறினேன். பேருந்து ஓடினால் முகத்தின் எதிரே தீச் சுவாலையை பிடித்தாற் போன்ற அனல் காற்று. நின்றாலோ ஊற்றெடுக்கும் வியர்வை. தாகத்தைத் தணிக்க அருந்திய குளிர்பானங்கள் எல்லாம் அருந்திய கணம் ஆவியாய் மாற, அவற்றின் திகட்டும் இனிப்பு மட்டும் வேண்டா விருந்தாளியாய் நாக்கில் படர்ந்து மேலும் எரிச்சலூட்டியது.

அகன்ற சுவரொட்டிகளில் கோடி வன்னியர்களை பெரிய அய்யாவும் சின்ன அய்யாவும் சித்திரை நிலவு அன்று மகாபலிபுரத்திற்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். பல்லவர்கள் எப்போது வன்னியர்கள் ஆனார்கள் அல்லது வன்னியர்கள் எப்போது பல்லவர்கள் ஆனார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டும். சேலம் நெருங்க நெருங்க தனியரசு அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்த வயதில்லாமல் வணங்கிக் கொண்டிருந்தார்கள். இடை இடையே எழுச்சி நாயகன் ஈஸ்வரனும் சுவர்களில் தென்பட்டார். “நீ உட்கார்ந்தால் எழுந்திருக்கும் எழுச்சி நாயகன்” பாடல் வரி மனதில் ஓடியது.

வழி நெடுகக் குப்பைகள். தமிழகமே ஒரு மாபெரும் குப்பை மேடாகத் தெரிந்தது. இதைப் பற்றி ஒரு பதிவு மனதிலேயே எழுதிமுடித்தேன். வெக்கையும் வியர்வையும் சேர்ந்து வார்த்தைகளை மேலும் காரசாரமாக்கின.

திருப்பத்தூர் தாண்டியாயிற்று. இன்னும் இரண்டு மணி நேரம் தள்ள வேண்டும். கிண்டிலில் கொண்டு வந்த ரஷ்டியும் கை விட்டு விட்டார். என்ன செய்ய, எரிச்சல் மண்டியது.

அரூர் தாண்டியவுடன் சட்டென சூழ்நிலை மாறியது. அப்பொழுது தான் பெய்திருந்த சிறு மழை. மண்வாசனை. வளைந்து வளைந்து போகும் மலைஅடிவாரப் பாதை.  இந்தக் கோடைக்கு சம்பந்தமே இல்லாத மழை மேகங்கள். அதற்குப் பின்னே இருந்து எட்டிப் பார்க்கிற சூரியன். அதைப் பிடிக்க ஓங்கி நிற்கும் மூங்கில் காடுகள். ”மூங்கில் காற்றில் தீ விழும் பொழுது மூங்கில் காடென ஆயினள் மாது” பாடல். வெள்ளை உடையில் நாணத்தோடு கீழ் நோக்கி அபிநயம் பிடிக்கும் மனிஷா கொய்ராலா.

சட்டென எரிச்சலும் கோபமும் விலகின. மழைக்காற்றால் குளிர்ச்சி பரவியது. எதிர்பாராத சந்தோஷம். இந்த மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்களால் ஆனது தானே வாழ்க்கை?

2 comments:

Anonymous said...


Dust of Snow
By Robert Frost
The way a crow
Shook down on me
The dust of snow
From a hemlock tree

Has given my heart
A change of mood
And saved some part
Of a day I had rued.

Chenthil said...

Anon, thanks. That was an apt take of what I tried to portray, and with far fewer words.