Saturday, March 25, 2017

கடைசியில் அசோகமித்திரனைப் பார்க்கவில்லை

இரவு 9.40 மணிக்கு டிவிட்டரில் முதல் செய்தி வந்தது. ‘எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்’. சில நிமிடங்கள் பித்துப் பிடித்தாற் போல உட்கார்ந்திருந்தேன். எதிர்பார்த்தது தான். இருந்தாலும் வருத்தம் கவ்விக் கொண்டது. போன மாதம் ஒரு இலக்கியக் கூட்டத்தில் பார்த்த போதே இறுதி நாட்களில் இருக்கிறார் என்று தெரிந்தது. அவரால் பேச முடியவில்லை. விருதை வழங்கிவிட்டு உடனே கிளம்பிவிட்டார்.

மீண்டும் மணி பார்த்தேன். கடைசிப் பேருந்துக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. தூத்துக்குடி - சென்னை இப்போதெல்லாம் வெறும் 9 மணி நேரம் தான். ரெட்பஸ் இணையதளத்தில் டிக்கெட் புக் செய்துவிட்டு சென்னையிலிருக்கும் மனைவிக்கு ஃபோன் செய்தேன்.

எடுத்தவுடனே “என்னங்க, அசோகமித்திரன் தவறிப் போய்ட்டாராமே. இப்ப கிளம்பி வர பஸ் இருக்குமா” என்றாள். அவர் மீது நான் கொண்டிருக்கும் அதீத பக்தி அவளுக்கு நன்றாகத் தெரியும்.

“10.45 பஸ் இருக்கு. இப்ப தான் டிக்கெட் புக் பண்ணேன். காலைல 7, 7.30க்கெல்லாம் வந்துடுவான்.”

“எங்க காரியம் பண்றாங்களாம்?”

“கல்யாண்ராமன் கிட்ட கேட்டேன். காலைலயே இருக்கும்னாரு. வேளச்சேரி அட்ரஸ் அனுப்பிச்சிருக்கார்”

“சரி, பத்திரமா வந்து சேருங்க”

பதினொரு மணிக்கு பஸ் கிளம்பியது. கூட்டம் அதிகமில்லை. இதே தூத்துக்குடியில் தான் யார் எழுதியதென்றே  தெரியாமல் ”பதினெட்டாம் அட்சக் கோடு” வாசித்தேன். ஏறத்தாழ இருபது வருடங்கள் முன்பு. நான் வேலை பார்த்த தொழிற்சாலையின் ’ஆஃபிஸர்ஸ் கிளப்’ நூலகத்தில் பாலகுமாரன் நாவல்களைத் தேடும்போது கண்ணில் பட்டது. ஒரே மூச்சில் படித்துவிட்டு பல நாட்கள் சந்திரசேகரனின் நினைவுகளோடு அலைந்தது இப்போது நினைவுக்கு வந்தது. அந்த நூலகத்தில் அவரது நாவல்கள் வேறேது இல்லை.

பின்னர் வேலை மாறி சென்னை வந்த பின் தான் மற்ற புத்தகங்களைப் படித்தேன். புலிக்கலைஞனும், ஐநூறு கோப்பை தட்டுக்களும்,  பிரயாணமும் அலைக்கழித்த காலம் அது. அவரது சிறுகதைகள், நாவல்கள் தாண்டி அவரது கட்டுரைத் தொகுப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன.

அவரது 50 ஆண்டு காலக் கட்டுரைத் தொகுப்பைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. அதிகமும் அவர் கணையாழியில் ஆசிரியராய் இருந்த போது எழுதியது. சென்னையை மையமாகக் கொண்ட ஒரு கலாச்சார ஆவணம் அந்தத் தொகுப்பு. தஸ்தயோவ்ஸ்கி, ஃபால்க்னர், ஹெமிங்வே, என்று நீளும் அயல் இலக்கிய அறிமுகம், தமிழ் இலக்கியத்தின் ஒவ்வொரு அணுவையும் பற்றிய கூரிய பார்வை, தமிழ் சினிமா பற்றிய அங்கதம்  மிக்க தீவிர விமர்சனங்கள், சிறு பத்திரிக்கை அனுபவங்கள் என்று எந்தப் பக்கத்திலிருந்து படித்தாலும் சுவாரசியமூட்டும் தொகுப்பு.

பஸ் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. காலை 7 மணிக்குள் சென்னை போய்விடுவேன் என்று தோன்றியது. மீண்டும் அசோகமித்திரன் நினைவுகள். நான் இலக்கியக் கூட்டங்கள் போவது மிகக் குறைவு. இது வரை போனதெல்லாம் அசோகமித்திரனைப் பார்ப்பதற்காகத் தான். 2004 ல் உயிர்மை முதலாண்டுக் கூட்டத்தில் அவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்தமான உரை. சிரிக்காமல் பேசி கூட்டத்தை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். ஆங்கிலத்தில் சொல்வது  போல், “He carried his scholarship lightly". ஹ்ம்ம். அதற்குள் carries என்பது carried ஆக மாறிவிட்டது.

நான்கைந்து இலக்கியக் கூட்டங்களில் பார்த்திருந்தாலும் ஒரு வார்த்தை அவர் கூடப் பேசியதில்லை. ஆனாலும் அவர் மீதான ஈர்ப்பு / பக்தி / ரசிக மனப்பான்மை அதிகரித்த வண்ணம் இருந்தது. யாரோடு தமிழிலக்கியம் பற்றிப் பேசினாலும் அசோகமித்திரனுக்கு வந்து விடுவேன். புலிக் கலைஞனைப் பற்றிப் பேசிப் பேசி என் நண்பன் அவன் வளர்க்கும் பூனைக்கு ‘டகர் ஃபைட் காதர்’ என்று பெயரிட்டு விட்டான்.

வீட்டுக்கு வந்த போது காலை எட்டு மணி. உடனே கிளம்பி வேளச்சேரி போயிருக்க வேண்டும். தவறுதலாய் Facebook எட்டிப் பார்த்துவிட்டேன். அழகிய சிங்கர் மதியம் 12 மணிக்குக் காரியம் நடை பெறும் என்று பதிவிட்டிருந்தார். சரி, பதினொரு மணிக்குப் போகலாம் என்று நினைத்து சற்று தூங்கிவிட்டேன்.

பத்தரைக்கு எழுந்து வேளச்சேரி கிளம்பினேன். விஜயநகர் சந்திப்பைத் தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஓரிடத்தில் இரண்டு பேருந்துகளுக்கு நடுவே இருந்த சிறிய இடைவெளியில் ஹோண்டா ஆக்டிவாவை செலுத்திச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது சட்டென்று தவறிவிழுந்தால் இந்தப் பேருந்து சக்கரம் மேலே ஏறி இறங்கும் என்ற விபரீத எண்ணம் எழுந்தது. அசோகமித்திரன் சமீபத்திய கதை ஒன்றில் கணவன் மனைவி இருவரும் போக்குவரத்து நெரிசலில் இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி பேருந்துச் சக்கரம் ஏறி இறப்பார்கள், அது வேறு நினைவுக்கு வந்தது.

வேளச்சேரி வீட்டை சரியாகக் கண்டுபிடித்து போனேன். அடுக்ககம் அமைதியாக இருந்தது. கீழே இருந்த நாற்காலிகளில் இரண்டு பெண்மணிகள் மட்டும் அமர்ந்திருந்தார்கள். யாரையும் காணவில்லை. ஒரு தொலைக்காட்சியின் OB Van கிளம்பிக் கொண்டிருந்தது. கீழே சிதறியிருந்த பூக்களை ஒரு அம்மாள் கூட்டித்தள்ளிக் கொண்டிருந்தார்.

அவரிடம் போய், “அசோகமித்திரன்...” என்று இழுத்தேன்.

“இங்க தான் சார் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல. ஆனா அப்பவே எடுத்துட்டுப் போய்ட்டாங்களே”

“அப்படியா, எந்த சுடுகாடுன்னு தெரியுமா”

“பெசண்ட் நகர்னு சொன்னாங்க சார்”

வெளியில் வந்தேன். இது வரைக்கும் பெசண்ட் நகர் சுடுகாடு போனதில்லை.  எங்கள் குடும்பத்தில் திருவொற்றியூர் தான். கூகுள் மேப் இருபத்தி ஐந்து நிமிடங்கள் ஆகும் என்று காட்டியது. சரி போவோம் என்று கிளம்பினேன்.

போகும்போதே மனதுக்குத் தெரிந்தது, நான் போவதற்குள் முடிந்திருக்கும் என்று. லா.ச.ரா லால்குடியில் இறந்த பாட்டியின் காரியத்துக்குச் சென்னையிலிருந்து பஸ் பிடித்துப் போவதற்குள் எல்லாம் முடிந்ததைப் பற்றி எழுதியிருப்பார். ’பாற்கடலி’ல் என நினைக்கிறேன். அது போலத் தான் ஆகப் போகிறது.

பெசண்ட் நகர் மின் மயானத்துக்குப் போன போது நேரம் சரியாக 11.50. பத்து இருபது பேர் தான் இருந்தார்கள். நடிகர் நாசர் நின்று கொண்டிருந்தார். அவர் தீவிர இலக்கிய வாசகர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அவரைச் சுற்றி நாலைந்து பேர்.

கல்யாண்ராமன் வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து மையமாய் தலையசைத்தேன். அவரும் தலையசைத்தார்.

“இப்ப தான் வரேன்..” என்று சம்பந்தமில்லாமல் இழுத்தேன்.

“எல்லாம் முடிஞ்சாச்சு”

“FB ல பன்னெண்டு மணின்னு போட்டிருந்துச்சு. அதான்..”

“அவர் சன் அப்படித்தான் சொல்லியிருந்தார். பட் தென்...” என்று தோளைக் குலுக்கினார்.

அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில் உட்கார்ந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. “நன்றி அசோகமித்திரன் சார்” என்று முணுமுணுத்தேன்.

அறுநூறு கிலோமீட்டர் தாண்டி நேரத்தோடு வந்துவிட்டு, மயானத்துக்கு அரை மணி நேரம் தாமதமாய் வந்ததால் கடைசியாய் அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் இருந்திருந்தால் இந்த அபத்தத்தை ஒரு நல்ல சிறுகதையாய் எழுதியிருப்பார் என்று தோன்றியது.

நாசரைச் சுற்றி மின்மயான ஊழியர்கள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

2 comments:

சமயவேல் said...

இப்படித்தான் நடந்து விடுகிறது. துயர்ப்பொழுதிலும் ஏமாற்றம் கொண்டு வரும் தருணங்கள். Sorry friend.

Anonymous said...

தாய்மை என்பதோர் அழகிய பயணம். மிகக் கடினமானதும் கூட. சில அன்னையரின் தாய்மை அனுபவங்கள் நம் சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்யும் உத்வேகத்தை அளிக்கும். சிலர் தங்கள் சுக துக்கங்களைக் கையாளும் வழிமுறைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவன. அன்னையர் தின சிறப்பாக Mycity4Kids கொண்டாடும் #Momspiration அத்தகைய தாய்மார்களுக்கு சமர்ப்பணம்.

தன்னுடைய மன உறுதியாலும் வைராக்கியத்தாலும் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய அன்னையரைப் பற்றிய படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. யார் கண்டது, நீங்களும் யாரோ ஒருவரை அதிசயிக்க வைத்திருக்கலாம்.. !!
https://www.mycity4kids.com/parenting/article/momspiration-celebrating-mums-who-inspire
Gift Sponsors- mycity4kids.com, VLCC and Himalaya BabyCare
#Momspiration
If you face any issue, you can write to me at shavet.jain@mycity4kids.com