Tuesday, March 31, 2015

அழகு நிறைந்த வீடு

எல்லாக் குடும்பங்களிலும் பழங்கதைகள் இருக்கும். லா.ச.ரா. போன்ற தேர்ந்த எழுத்தாளரிடம் அது பாற்கடலாய் பிரவாகிக்கும். பாற்கடலில் ஒரு துளியாவது அடைந்துவிடும் முயற்சி இது.

ஏழு மகன்களுக்குப் பிறகும் ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று காத்திருந்து அந்த ஆசை நிறைவேறாமல் இறந்து போனார் எங்கள் அப்பத்தா. பெயர் அழகம்மை. எங்கள் வீட்டில் அவரது இந்த ஒரு படம் தான் இருக்கிறது.


ஐயாவும் எனக்கு இரண்டு வயதிருக்கும் போதே இறந்து போனதால் அவர்கள் கதை எல்லாமே எனக்கு செவிவழிச் செய்தி தான்.

அப்பாவுக்கு பதினாறு பதினேழு வயதிருக்கும் அப்பத்தா இறந்த போது. கடைசி சித்தப்பாவுக்கு மூன்று வயது தான். அடுத்தது நிச்சயம் பெண் குழந்தை தான் என்று காத்திருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு வயிற்றில் கட்டி எனத் தெரிந்ததும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குப் போய் சட்டென்று செத்துப் போனதாகச் சொல்வார்கள். எங்கள் குடும்பத்தின் அனைத்து வீடுகளிலும் சாமி அறையில் இந்தப் படம் இருக்கும். வருடா வருடம் படையலும் உண்டு.

பல வருடங்கள் கழித்து அப்பத்தாவின் சிறு வயது தோழி எங்கள் வீட்டுக்கருகே குடிவந்த போது அப்பத்தாவைப் பற்றி ஒரிரு விபரங்கள் சொன்னார். அதில் முக்கியமானது அந்தக் காலத்திலேயே (1938ல்) அப்பத்தாவும் ஐயாவும் விரும்பி கல்யாணம் செய்து கொண்ட விஷயம் தான்.  ஐயா பால் பாட்மிண்டன் (யாருக்காவது இது இன்னும் ஞாபகம் இருக்கிறதா?) விளையாடும் நேரத்தில் அவரைப் பார்த்து அப்பத்தா விரும்பியதாக அந்தத் தோழி பொக்கை வாயால் சிரித்தபடி சொன்னார். வெறும் படமாக இருந்த அப்பத்தா உயிர் பெற்று கண்முன்னே நடமாடத் தொடங்கினார்.


ஐயா வயிற்றில் சிசுவாய் இருக்கும் போதே பர்மாவுக்கு சென்ற அவரது அப்பா அங்கே இறந்து போனார். ஒரே பையன் என்ற காரணத்தால் ஐயாவை அவரது அம்மா வேலைக்கே அனுப்பவில்லை. இப்படி ஒன்றும் செய்யாமல் இருக்கும் பையனுக்கு பெண் கொடுக்க அப்பத்தா வீட்டில் விருப்பமில்லை. அதனால் ஐயாவின் அம்மா பெண்ணிற்கு நகை போட்டு திருமணம் செய்து வைத்து வீட்டிற்கு அழைத்து வந்ததாகக் கேள்வி.

மிகவும் பிடிவாதக் காரர் என்று சொல்லுவார்கள். சிங்கப்பூரில் இருந்து வந்த அண்ணன் தன்னைச் சற்று இளக்காரமாகப் பேசியதால் அவர் வாங்கி வந்த எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளாமல் அவரை அழ வைத்திருக்கிறார்.

ஏற்கனவே சொன்னது போல் அப்பத்தாவிற்கு பெண் பிள்ளை வேண்டுமென்று கொள்ளைப் பிரியம். ஆனால் நடக்கவில்லை. அதற்கடுத்த தலைமுறையில் வீடு நிறையப் பெண் குழந்தைகள் பிறந்தனர். நான் பிறந்த போது “ஹ்ம்ம், பையனா?” என்று சலித்துக் கொண்டு இரண்டு நாள் கழித்துத் தான் அப்பா பார்க்க வந்தார்.

முதலில் பிறக்கும் பெண் குழந்தைக்கு அழகம்மை என்று பெயரிடுவது எழுதப் படாத விதியாயிற்று. என் தங்கை பெயர் அழகம்மை. பெரியப்பா வீட்டில், சித்தப்பா வீட்டில் என்று மொத்தம் நான்கு அழகம்மை. பெண் பிள்ளை இல்லாத சித்தப்பா வீட்டில் அழகப்பன். என் மகள் பெயரும் அழகம்மை. விசேஷ நேரங்களில் அனைவரும் கூடும் போது குட்டி அழகு, பெரிய அழகு, தூத்துக்குடி அழகு என்று அடைமொழிகளால் அழைக்கப் படுவார்கள்.  மொத்தத்தில் அழகு நிறைந்த வீடு.

7 comments:

Unknown said...

அருமையான பதிவு செந்தில் நாதன்.

Chenthil said...

நன்றி NGSK.

Arul Valan Lawrence said...

Good one Mudhalali

Alagu said...

What a beautifully written post. For the longest time growing up, I was very embarrassed by my name. It was old fashioned and not just cool for school ...other girls had far more modern names. Two decades and many interesting experiences later, I have finally come to love it. I love how archaic it sounds and how in a way it helps me carry a bit of my heritage! Thank you - your post certainly struck a chord!

Sivakumar Myleri said...

Good one Chen

Chenthil said...

Wow, Alagu - glad to see your comment. We keep telling my daughter how her name is so special.

Arul, Siva - Thanks.

Anonymous said...


Dear Mr.Chenthil

Can you recommend a good Kambaramayana Urai and where I can get it?

Thanks much
-Kavitha