Monday, August 06, 2012

கும்பமுனியும் க்யூரியாசிட்டியும்

கும்ப முனிக்கு ஒரே கோபம். “எழவு நேத்தையிலிருந்து ஒவ்வொருத்தனா ஃபோனப் போட்டு உயிரடுக்குறானுவ. செவ்வாய்க்கு கோள் அனுப்பிச்சாலும் அனுப்பிச்சான், இங்கன இருக்குற ஊத்தவாய் பயலுவல்லாம் அதைப் பற்றி உங்கள் கருத்து என்னன்னு மைக்கால மூஞ்சில முட்டுறானுவ”

தவசிப்பிள்ளைக்கு இதெல்லாம் பழகிப்போய் விட்டது. “நீரு ஏம்வே செத்த அகாடமி, சாவாத அகாடமின்னு விருது வாங்கித் தொலைச்சீரு. அதான் செவ்வாய்க்கு கோள் போனாலுஞ்சரி, தோவாளைக்கு பஸ் போனாலுஞ்சரி உம்ம கிட்ட கருத்துக் கேக்க வந்துடுகான். அந்த கிளமண்டுப் பய வந்தா முதல்ல போன பேட்டிக்குக் காச எண்ணி வக்கச்சொல்லும். அவனவன் குடிச்சுட்டுப் போற காபித் தண்ணிக்கே விருதுக் காசெல்லாம் வீணாப் போச்சு. அது ஏம்வே அந்தக் கவிஞனல்லாம் கேக்க மாட்டேங்குறானுவ. ”

“செத்த மூடிட்டி இருக்கீறா. ஒருத்தரு பத்து வருசம் முன்னாடி செவ்வாயில் உள்ளது எனது ஜீவன்னு எழுதித் துண்டு போட்டுட்டாரு. அவரு கட்சி டிவிலே பேட்டி கொடுத்துட்டு இருக்காரு. ஒருத்தரு இப்ப ஆரம்பிச்சிருக்கிற புதிய தலமுறைல (பத்து வருசம் கழிச்சு பழய தலமுறைன்னு மாத்திருவானோ) ஆஸ்தான வித்துவானா இருக்காரு. “

“உமக்கு அடுத்த ஒருத்தரு தான் விருத வாங்கிட்டாருல்ல, அவர ஏன் கேக்க மாட்டேங்குதான்”

“அவரு வேற பக்கம். செவ்வாயில செங்கொடி நாட்டப் போய்ட்டு இருப்பாரு”

“ஆக, நீரு தாம் ஊருக்கு எளச்ச ஆண்டி. செரி பாட்டா, கெரகம் அது பாட்டுக்கு இருக்கு, அதப் போய் இவம் ஏன் எட்டிப் பாக்கான். எட்டிப் பாத்தா மூடிட்டு வர வேண்டியது தானே, எழவெடுத்த கிளமெண்டு உம்ம அதப் பத்தி ஏன் கேக்க வாரான்”

கும்பமுனிக்குக் கோபம் தலைக்கு மேல் ஏறியது. “என்னவே, என்னப் பாத்தா தோவாளைல தேங்கா விக்கிறவம் மாதிரி தெரியுதா உமக்கு.

அவம் ஏன் என்னக் கேக்க வாரான் தெரியும்ல, இலக்கியத்தில் செவ்வாயைப் பற்றி என்ன இருக்கிறதுன்னு எழுதி வச்சுட்டுப் படிப்பான். நானும் அப்பம் கண்ட குரங்கு மாதிரி ஹெச்.ஜி. வெல்ஸ்லருந்து ஆரம்பிபேன். உடன கட் பண்ணிட்டு அய்யா தொல்காப்பிய்த்திலருந்து சொல்லுங்கம்பான்.

உலகத்துல வந்த முதல் குரங்கே தமிழ்க் குரங்கானு தானே கேப்பானுவ. “


3 comments:

Krishnan said...

Very nice....been reading Nanjil Nadan recently ?

Chenthil said...

Thanks Krishnan. Nanjil and Asokamithran are two writers whom I read repeatedly

Krishnan said...

Dear Chenthil, me too enjoy rereading Nanjil, his சதுரங்கக் குதிரை and எட்டுத்திக்கும் மதயானை being my favorites. I have not yet read his மாமிசப்படைப்பு and மிதவை.