Tuesday, May 29, 2012

லா.ச.ரா சிறுகதையும், தி.ஜா. நாவலும்

இந்த வருட புத்தக கண்காட்சியில் லா.ச.ரா. சிறுகதைத் தொகுப்பு வாங்கினேன். அந்த்த் தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த கதை “ராஜகுமாரி”. மாய யதார்த்தவாதம் (magical realism) என்ற பதம் உபயோகத்திற்கு வரும் முன்னர் எழுதப் பட்ட மாய யதார்த்தவாத கதை இது.

காவேரி அம்மன் என்று பின்னர் கொண்டாடப்படும் பெண் பாட்டியிடம் உரையாடும் இடம் சுளீரென்று இருக்கும். இந்தக் கதையைப் படிக்கையிலேயே தோன்றியது - தி. ஜானகிராமன் “மரப்பசு” நாவலில் மாங்கு மாங்கென்று எழுதியதை இவர் ஒரு சிறுகதையின் நாலு பத்திகளுக்குள் அடக்கி விட்டார் என்று. அதை மேற்கோள் காட்டிப் பதிவிடத் திட்டம், ஆனால் கதையைத் தட்டச்சிட சோம்பேறித் தனம். இன்று அழியா சுடர்கள் பதிவில் ராஜகுமாரி கதையைப் பார்த்தேன். அங்கிருந்து சுட்டுப் போடுகிறேன். இந்தப் பாகம் உங்களை உலுக்கியதென்றால், கண்டிப்பாக முழுக் கதையையும் படிக்கவும்.
-------------------------------------------------------------------------------------------
“யாருடி அம்மா நீ? என்னடிம்மா பண்ணினே?”

“நான் அசலூர். ராத்தங்க இடந்தேடி இந்த ஊர் நாலு கால் மண்டபத்தில் தங்கினேன்”

”புடவையைச் சரி பண்ணிக்கோ. இங்கே உனக்கு ஒண்ணும் நேர்ந்துடாது”

ஆனால் அந்தப் பெண் லேசா சிரிச்சிட்டு நிக்கிது. அம்மா சொன்னபடி மானத்தை மூட முயற்சி செய்யல்லே. மூக்கும் முழியுமா இருக்கு. ஆனால் புத்தி சத்தே பேதலிச்சிருக்கும் போலிருக்கே. பயமா பாவமா தெரியல்லியேன்னு அம்மாவுக்கு எண்ணம். ஏன்னா அந்தப் பொண்ணுக்கு முழி சரியாயில்லே. இங்குமங்கும் என்னத்தையோ கண் தேடி அலையுது.

“புதுசா வந்த இடத்திலே ஊர்க்கோவத்தை சம்பாதிக்க என்ன பண்ணினே?”

வந்தவளுக்குக்கண் அலைச்சல் நிக்கல்லே. அம்மா சொன்தைக் காதில வாங்கிட்டு ஆனால் ஏதோ நினைப்பா.

”எல்லோரும் செய்யறதைச் செஞ்சுண்டே இருக்கிறதைவிட புதுசாவோ ஈனமாவோ ஒண்ணும் நான் பண்ணிடல்லே” அம்மாவுக்குப் புரிஞ்சுபோச்சு. கண்ணுலே தண்ணி தளும்பிட்டுது.

”அடப்பாவமே! ஏண்டி குழந்தை வயத்துக்கில்லாத கொடுமையா?”

”ஏன பாட்டி. நானே வழங்கறவளாயுமிருக்க கூடாதா?”

”நீ செல்றது புரியல்லியே! காரியம் ஒண்ணொண்ணுக்கும் வேளைப் பொழுதுன்னு ஒண்ணு இருக்கே?”

நீங்கள் சொல்றது என்னிடம வருவோருக்குத்தான்தான் இருக்கணும். எனக்குக் கிடையாது. ஓடற தண்ணீர் ஓடிண்டே இருக்கு. என்னிடம் இருப்பது என் ஆழம ஒண்ணுதான். அதுவும் எவ்வளவுன்னு எனக்கே தெரியாது. அதுவும் எனக்கு ஒளிவு மறைவில்லை”

”என்னடிம்மா சொல்றா. புரியல்லியே!”

”இதோ பாருங்க பாட்டி. நானா வலியப்போய் யாரையும் கையைப் பிடிச்சு இழுக்கல்லே. ஆனால் தேடிண்டு வந்தவாளை ”மாட்டேன்னு” மறுக்கல்லே. “ஆமா”ன்னு தலையையும் ஆட்டல்லே. நீங்கள் எனக்கு இப்போ அடைக்கலம் தந்து அணைச்சுக்கலியா. அது மாதிரி ஆதரவா அணைச்சுண்டேனோ என்னவோ! ஏன் பாட்டி. நெஞ்சடியில நாம் அத்தனை பேரும தாய்மார்தானே! நம் உடலமைப்பும் அப்படித்தானே! மேடும் பள்ளமுமா ஓடினாலும் மாரெல்லாம் பால்தானே!. பாட்டிக்குத் தலை ”கிர்ர்ர் – ”

அடிச்சுட்டு வர வெள்ளத்திலே வீட்டுக்கூரை குமுங்கினாப்போலே தூண்மேலே சாஞ்சு சரிஞ்சு அப்படியே குந்திட்டாங்க. தண்ணியிலே கரைஞ்சு போறாப் போல கூடம் தூண் சுவர் எதிரே அந்தப் பொம்புள்ளே தான் எல்லாமே வரப்புக் கலைஞ்சு மிதப்பலாடுது. எங்கிருந்தோ ஒரு குரல் காதண்டை ஒலிக்கிறது.

”எதையும் அக்கலக்கா பிரிச்சுக் கேட்டால் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை. இல்லை எனக்குச் சொல்லத்த தெரியல்லே. எதையுமே அக்கலக்கா பிரிச்சுப் பார்த்தால் செய்யாத பாபமில்லை. நேராத புண்ணியமில்லை. ஆழத்துக்கு ஆழம் பார்த்து ஆகற காரியமில்லை. இடுப்பளவு ஆழக்காரனை குளிபாட்டறேன். கழுத்தளவு வந்தவன் என்னில் முழுகி எழுந்திருக்கிறான். ஆழந்தெரிஞ்சோ தெரியாமலோ உள்ளேயே வந்துட்டவன் என் வயிற்றில் தூங்கறான். காலை நனைக்கவே பயப்படறவன் அழுக்கு அவனிடமே பத்ரமா இருக்கு. சமுத்திரத்தையே முழங்காலுக்குக் கண்டவன் பாதம் கழுவுவது தவிர நான் ஒண்ணும செய்ய முடியாது. துணிஞ்சவாள்தான் துறந்தவாள். துறந்தவாளுக்குத்தான் தரிசனம். கொஞ்சநேரம தப்பியோ வழி தடைபட்டோ வந்தாலோ குழந்தைகளுக்குத் தாங்கல்லே. நானும் ஓடோடித்தான் வரேன். ஆனால் என் குழந்தைகளே என்மேல் கல்லைவிட்டு எறியறதுகள். தாணை அடையாளம் தெரிஞ்சிக்கல்லே. இதைவிட துக்கம் எனக்கு வேணுமா? ஆனால் இதைவிட வேடிக்கை உலகத்தில் உண்டா? எதுவுமே என்னைப் புரிஞ்சிக்கல்லே. புரிஞ்சுக்கறதுன்னா என்ன? வந்த்தை வந்தபடி வாங்கிக்கறதுதான். எனக்குத தெரிஞ்சுணட்ட வரை புரிஞ்சுண்டதற்கு அர்த்தம். ஆனால் இதைப் புரிஞ்சுக்க அனுபவத்துக்கு ஒண்ணு உன்மாதிரி வயதாயிருக்கணும். இல்லை என்மாதிரி வயதை மீறியிருக்கணும். ஆனால் ஒண்ணு. உலகத்திலே (குழந்தைகளில்லாமல்) எல்லோருமே கிழமாயிருந்துட்டா எல்லாத்தையும் புரிஞ்சுண்டுதான் என்ன பண்றது? அனுபவிக்க முடியாத அறிவு அத்தனையும் வறட்சை. வறட்சைக்கா வந்திருக்கேன்? குடம் தளும்புற மாதிரி அதென்ன கிளுகிளுப்பு? சிரிப்பா? அழுகையா? சிரிப்பாயிருந்தாலும் அதைக் கேட்டதும் எனக்கேன் இப்படி தொண்டை அடைக்கிறது?

”என் குழந்தைகள் செழிக்கத்தானா வந்திருக்கேன்! இல்லை எனக்காகவா வந்திருக்கேன்? குழுந்தைகள் வயிறு குளுமை கண்டு என் ஈரம் நெஞ்சுவரை பாஞ்சு எங்கும் க்ஷேமம் தழைக்கணும்னு எப்படி ஓடோடி வர்ரேன். எங்கிருந்து நான் எப்படி வந்தாலும் அடங்கற இடம் ஒண்ணு எனக்கும் உண்டே. அது இங்கே எங்கே? இங்கே எங்கே?”

அந்தப் பொம்புள்ளை திடீர்னு புடவையைக் கழஞ்சு கீழே போட்டுட்டு முண்டக்கட்டியா ஓடிப்போய் கிணற்றிலே தொப்புன்னு குதிச்சிட்டா.

”ஐயோ”ன்னு அலறிக்கிட்டே பாட்டியம்மா பின்னாலேயெ லொங்கு லொங்குன்னு ஓடிப்போய் கிணற்றிலே எட்டிப் பார்த்தா. உள்ளேயிருந்து தண்ணி மேலே பொங்கி வருது. நிமிசத்துல கிணறு வழியுது. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 comment:

Ravi said...

அருமை. முழு கதையும் படிக்க வேண்டியது தான். நன்றி.